

சென்னை
இந்திய கடலோர காவல்படை யுடன் கூட்டுப் பயிற்சி மேற்கொள் வதற்காக அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான ‘ஸ்ட்ராட் டன்’ சென்னை வந்தது. இக்கப்ப லுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடையே கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க கடலோர காவல் படை, இந்தியக் கடலோர காவல் படையுடன் கூட்டுப் பயற்சி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஸ்ட்ராட்டன்’ என்ற கப்பல் முதன்முறையாக இந்தியா வந்துள்ளது. இக்கப்பலில் கேப்டன், மாலுமிகள் என மொத்தம் 550 பேர் இடம்பெற்றுள்ளனர். சென்னை துறைமுகத்துக்கு வந்த அக்கப்பலுக்கு, இந்தியக் கடலோர காவல்படை டிஐஜி சஞ்சீவ் திவான் தலைமையில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று காலை, சென்னையை ஒட்டியுள்ள நடுக் கடலில் இருநாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன. இதில், இந்தியக் கடலோர காவல் படை சார்பில், சேட்டக் ஹெலி காப்டர், ரோந்துக் கப்பல்களான ஷவுரியா, அபிக் ஆகியவையும், அமெரிக்க கடலோர காவல் படை சார்பில், டால்பின் ஹெலிகாப்டர் களும் பயன்படுத்தப்பட்டன.
இப்பயிற்சியின்போது, கடற் கொள்ளையர்களை பிடிப்பது, கடத்தல்களை தடுப்பது, கடல் களில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுப்பது, கடலில் சிக்கித் தவிக் கும் மீனவர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள் ளப்பட்டன.
இதுகுறித்து, ஸ்ட்ராட்டன் கப்ப லின் கேப்டன் பாப் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளின் கடலோர காவல்படைகள் இணைந்து இக்கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
கடல் கொள்ளைகள், ஆட்கள் மற்றும் போதை மருந்துகள் கடத் தல், சட்டவிரோத மீன்பிடித்தலை தடுப்பது ஆகியவற்றின் அடிப் படையில் இப்பயிற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய பசிபிக் கடல்பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகை யிலும் இப்பயிற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
27-ம் தேதிவரை நடைபெறும் கூட்டுப் பயிற்சியின்போது, தகவல் தொழில்நுட்பங்கள், புதிய உத்திகள், தகவல் பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள், எண்ணெய் கசிவு போன்றவற்றால் கடல்சார் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுப்பது குறித்து விவாதித்தல், கூடைப்பந்து விளையாட்டு உள் ளிட்டவை நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
5 நாள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 27-ம் தேதி ‘ஸ்ட்ராட்டன்’ கப்பல் அமெரிக்கா திரும்புகிறது.