

ஒய். ஆண்டனி செல்வராஜ்
மதுரை
அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் அமைக்கப்படாததால், தனியார் மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சை பெறு வதற்காக லட்சக்கணக்கில் செலவழித்து நடுத்தர மக்கள் கடனாளியாகி வருகின்றனர்.
இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சினையால் சுமார் 2.75 கோடி தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் குழந்தையின்மை தம்பதிகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரு கிறது.
குழந்தையின்மை, தற்போது குடும்ப மற்றும் சமுதாயப் பிரச்சி னையாக மாறி விவாகரத்து வரை சென்று விடுகிறது. நீதிமன்றத்துக்கு வரும் விவாகரத்து வழக்குகளில், கணிசமானவை குழந்தையின்மை பிரச்சினை வழக்குகளாக உள்ள தாக கூறப்படுகிறது. நகரத்தில் 20 சதவீத குடும்பங்களில் குழந்தை இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
கருக்குழாயில் அடைப்பு, தொற்று, கர்ப்பப்பை பிரச்சினை, கரு முட்டை வளர்வதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் கருத் தரித்தலில் பிரச்சினை ஏற்படுவதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.
இந்தியாவில் 2017-ல் குழந்தை யின்மை சிகிச்சைக்காக மருந்து, கட்டணம் உட்பட ரூ. 1,831 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2023-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் கோடிகளை தாண்டும் என மருத்துவத் துறை பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தையின்மை சிகிச்சை கோடிக் கணக்கில் பணம் புரளும் சந்தையாக மாறி வருகிறது. இதில் போலி மருத்துவர்களும் ஏராளமாக ஊடுருவி உள்ளனர்.
வசதியான தம்பதிகள், தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக் கான ரூபாய் செலவழித்து சிகிச்சை பெற்று குழந்தை பெற் றுக் கொள்கின்றனர். ஆனால், நடுத்தர, ஏழை தம்பதிகள் கடன் வாங்கி செலவழித்து கடனாளியாகி வருகின்றனர்.
நடுத்தர, ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி உள்ளனர். ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவமனையில்கூட செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், மத்திய அரசு மருத்துவமனையான எய்ம்ஸில் 2007-ம் ஆண்டே செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதியை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் கேரள மாநில அரசுகள், தங்கள் மாநில அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கண்காணிப் பகம் அமைப்பின் பெண்கள் மற்றும் குழந்தைகள்நல சமூக ஆர்வலர் வெரோணிக்கா மேரி கூறியதாவது: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளதுபோல செயற்கை கருத் தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், தற்போது வரை அம் மையம் அமைக்கப்படவில்லை.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
குழந்தையின்மை சிகிச்சைக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைக்காக மட்டும் தனியார் மருத்துவமனை களில் ரூ. 40 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். அதன் பிறகு விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள், தொடர் சிகிச்சை என குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குமேல் வசூலித்து விடுகின் றனர். அதனால், செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவை நடுத்தர, ஏழை மக்கள் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை தத்தெடுப்பதி லும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதனால், நடுத்தர, ஏழை தம்பதிகள் சிகிச்சை பெற முடியாமல், வாழ்நாள் முழு வதும் மன நெருக்கடியிலேயே தவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தற் கொலை முடிவையும் நாடுகின்றனர்.
வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள தம்பதிகள், அரசு மருத் துவமனைகளையே நம்பி உள்ள னர். இதனால், அரசு மருத்துவ மனைகளில் செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சை மையத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.