Published : 23 Aug 2019 06:04 PM
Last Updated : 23 Aug 2019 06:04 PM

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர்: துணை நிலை ஆளுநர் உரையுடன் வரும் 26-ல் தொடக்கம்

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 26-ம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு அன்றைய தினம் கூடி பட்ஜெட் தாக்கலாகும் தேதியை முடிவு செய்ய உள்ளனர்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மார்ச் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசின் 5 மாத செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தாண்டுக்கான முழமையான பட்ஜெட் தாக்கல் செய்ய தேவையான நிதியை இறுதி செய்ய கடந்த மாதம் 13-ம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்டக்குழு கூட்டப்பட்டது. இதில் பட்ஜெட் நிதிக்காக 8 ஆயிரத்து 425 கோடி ரூபாய் இறுதி செய்யப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பட்டது. புதுச்சேரியில் பட்ஜெட் ஒப்புதலை மத்திய அரசு தான் அளிக்க வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதலுக்காக புதுச்சேரி அரசு காத்திருந்தது.

இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வரும் 26-ம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் பேரவை கூட்டம் தொடங்கும் என சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் எப்போது?

பட்ஜெட் தாக்கல் எப்போது என்று விசாரித்தபோது, "வரும் 26-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி மற்றும் பேரவை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படவுள்ளது" என்றனர்.

இந்த நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து மீது சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் ரங்கசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x