

தமிழகத்திற்கு யாரால் அவமானம், தலைகுனிவு என்பது தமிழக மக்களுக்கே தெரியும். இந்த நிமிடம் வரை பல்வேறு சி.பி ஐ வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் உட்பட்டு ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிற இவர்களால்தான் தமிழகத்துக்கு தலைக்குனிவு என காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
அரசு ப.சிதம்பரத்தின் மீது அழகாக இந்த வழக்கை ஜோடித்து இருக்கிறார்கள், தற்போது அமலாக்கத் துறை கைது நடவடிக்கையில் ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது உச்ச நீதி மன்றம் நீதியை வழங்கும் என்று நம்புகிறோம்.
அமைச்சர் ஜெயகுமாரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்திற்கு யாரால் அவமானம், யாரால் தலைகுனிவு என்பது தமிழக மக்களுக்கே தெரியும். அதிமுக அமைச்சர்களைப் போல் பொது வாழ்க்கையில் தாழ்மை அடைந்தவர்கள் யாருமில்லை. இந்த நிமிடம் வரை பல்வேறு சி.பி ஐ வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் உட்பட்டு ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
ப.சிதம்பரம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி, தொழில் புரட்சிக்கு வழி வகுத்தவர். உலக சர்வாதிகாரிகளின் வரலாற்றை பார்க்கும்போது அடக்குமுறை என்பதன் அர்த்தம் புரியும். சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும், 10 நாட்களாவது சிறையில் வைக்க வேண்டும் என்று தான் பிஜேபி அரசு முயற்சி செய்து வருகிறது.
திமுக சிதம்பரம் கைது விவகாரத்தில் மௌனம் காட்டவில்லை, திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விட்டிருக்கிறார். ஒரு அரசியல் கட்சி தலைவர் அதை தான் செய்ய முடியும். என்று தெரிவித்தார்.
கராத்தே தியாகராஜன் தொடர்ந்து உங்கள் மேல் குற்றம்சாட்டி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, கொள்கை ரீதியாக அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர் அவரைப் பற்றிப் பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.