மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: 84 அடி உயர ராமநதி அணை நிரம்பியது- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: 84 அடி உயர ராமநதி அணை நிரம்பியது- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
Updated on
2 min read

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை இன்று (வெள்ளிக்கிழமை) நிரம்பியது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து இன்று காலை முதல் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மாதத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால், வடக்கு பச்சையாறு அணை, நம்பியாறு அணை தவிர மற்ற 9 அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டாறு அணை, கொடுமுடியாறு அணை, கருப்பாநதி அணை ஆகிய 3 அணைகள் அடுத்தடுத்து நிரம்பின. இதனால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலை வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப் பகுதியில் 31 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 675 கனஅடி நீர் வந்தது. இந்த அணைகளில் இருந்து 605 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் 109.70 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.37 அடியாகவும் இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 287 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 350 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அணை நீர்மட்டம் 58.80 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 2.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 9.18 அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணை நீர்மட்டம் 67.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 47 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் இன்று காலையில் 82 அடியாக இருந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் ராமநதி அணை நிரம்பியது. காலையில் விநாடிக்கு 138 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் 35 கனஅடியாகக் குறைந்தது. அணைக்கு வரும் நிர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது.

இதேபோல், 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 125.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 22 கனஅடி நீர் வந்தது. தொடர்ந்து நீர் வரத்து இருந்தால் சில நாட்களில் அடவிநயினார் கோவில் அணையும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலையில் வெள்ளம் குறைந்ததைத் தொடர்ந்து அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in