Last Updated : 28 Jul, 2015 01:00 PM

 

Published : 28 Jul 2015 01:00 PM
Last Updated : 28 Jul 2015 01:00 PM

கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இலவச பேருந்து ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இருந்து இலவச பேருந்து சேவையை அறிவித்திருக்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார்.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அப்துல் கனி என்ற சமூக ஆர்வலர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ராமேஸ்வரத்துக்கு தான் ஏற்பாடு செய்துள்ள இலவச பேருந்து சேவை குறித்து தகவல் தெரிவித்திருந்தார்.

கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துபவர்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் பர்வீன் டிராவல்ஸ் நிறுவனம் 2 பேருந்துகளை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அப்துல் கனி கூறும்போது, "களங்கரை விளக்கமாக இருந்த மாமனிதருக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும். இப்போதைக்கு நிறைய பேர் எங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து வருகின்றனர். மக்களின் தேவைக்கு ஏற்ப அதிக பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

காலை 10 மணி முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து இந்த இலவச பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. இதேபோல் இலவசப் பேருந்தில் செல்பவர்கள் ராமேஸ்வரத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x