திமுக மற்றும் காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

திமுக, காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்திற்காக திமுக டெல்லியில் போராட்டம் நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நாம் அனைவரும் இந்தியர்கள். அதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான திமுக, காஷ்மீர் விவகாரத்தில் குரல் எழுப்புவது பெருமை என பாகிஸ்தான் ரேடியாவில் கூறப்படுவதைவிட, பெரிய அவமானம், வெட்கித் தலைகுனியக்கூடிய விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா முழுவதும் திமுகவுக்கு இந்த போராட்டம் ஒரு பின்னடைவு.

2ஜி வழக்கு, ஐஎன்எக்ஸ் வழக்கால், தமிழனுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. திமுக, காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு.

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். முன்னாள் அமைச்சர் என்பதால், சிதம்பரத்திற்கு சிகப்பு கம்பளம் விரிப்பார்களா? ஒரு குடிமகனுக்கு உள்ள உரிமைகள் தான் அனைவருக்கும் உண்டு. இந்த பிரச்சினை வந்ததும் ப.சிதம்பரம் சிபிஐ அல்லது அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருக்கலாம்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்தனர்"

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in