

கோவை
கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கூடுதல் டிஜிபி கோவை வந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் கோவையில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகரில் 50 இடங்களிலும், மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தவிர சென்னையில் இருந்து கமாண்டோ படையினர் 80 பேர் கோவைக்கு வந்துள்ளனர். போச்சம்பள்ளி சிறப்பு காவல் படையில் இருந்து 1 பட்டாலியன், கோவை சிறப்பு காவல் படையில் இருந்து 2 பட்டாலியன் கோவையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய அதிவிரைவுப்படை போலீஸார் 10 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, கோவைக்கு வந்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன், மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணண் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாநகரில் சோதனை மேற்கொள்ளப்படும் இடங்களைப் பார்வையிட்டார்.
தீவிரவாதிகளுக்கு உதவியதாக திருச்சூரை சேர்ந்த அப்துல்காதர் என்பவரது புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.