Published : 23 Aug 2019 01:15 PM
Last Updated : 23 Aug 2019 01:15 PM

மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்க மறு ஆய்வு செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை

மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்க மறு ஆய்வு செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்திலுள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கடந்த மாதம் அறிவித்த தமிழக அரசு, அதற்கான தொடக்க நிலை பணிகளையும் மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் இத்திட்டம்தொடர்பான சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் அரசு அறிந்து செயல்படுத்தினால் அது இத்திட்டத்தை மேலும் வெற்றியாக மாற்றும்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த மாதம் 22 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடியில் செயல்படுத்தப்படும்; அத்திட்டத்தால் மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய நான்கு தொகுதி மக்கள் பயனடைவர் என்று தெரிவித்தார். உண்மையில் மேட்டூர் உபரிநீர் திட்டம் என்பது இன்னும் விரிவானதாகும்.

சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்கு கொண்டு சென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை காவிரி நீரை கொண்டு செல்வது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தால் நேரடியாக 30,154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18,228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் விவசாயிகளும் பயனடைவார்கள்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக ஏராளமான போராட்டங்களை நடத்தியது. 2008 ஆம் ஆண்டு சேலத்தில் எனது தலைமையில் நடந்த போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 2017 ஆம் ஆண்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டார்.

இத்திட்டத்திற்காக பாமக தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் பலமுறை குரல் கொடுத்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இத்திட்டத்தை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்ததுடன், பாமகவின் யோசனைகளையும் கேட்டார். அதைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட மதிப்பீடுகளும் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போது அறிவித்துள்ள திட்டம், ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட திட்டத்தின் சுருக்கப்பட்ட வடிவமாகும். இத்திட்டத்தின் மூலம் 100 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, அது மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய 4 தொகுதிகளில் பாசன நீர் தேவையை முழுமையாக நிறைவேற்றாது என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய திட்டத்தால் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள கோனூர் கிராமம், கொளத்தூர் ஒன்றியத்தில் காவேரிபுரம், கருங்கல் ஊராட்சிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாது. மாறாக, செட்டிப்பட்டி பகுதியில் நீரேற்று நிலையம் அமைப்பதன் மூலம் இந்த ஏரிகளுக்கும் நீரை கொண்டு செல்வது சாத்தியமாகும்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் மிகவும் பெரியது பனைமரத்துப்பட்டி ஏரியாகும். அதன் கொள்ளளவு 1.50 டிஎம்சி ஆகும். அந்த ஏரி நிரப்பப்பட்டால் சேலம் நகரத்திற்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும். ஓமலூர் தொகுதியிலுள்ள பல முக்கிய ஏரிகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வழங்காமல் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவதால் தாங்கள் எதிர்பார்க்கும் பயன் கிடைக்காது என்று சேலம் மாவட்ட விவசாயிகள் பாமகவிடம் தெரிவித்திருக்கின்றனர். இத்திட்டம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட விவசாயிகளிடமும் வருத்தமும், ஏமாற்றமும் தென்படுகிறது.

மேட்டூர் உபரிநீர் திட்டம் என்பது சேலம், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு வாராது வந்த மாமணி ஆகும். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் பாசனத் தேவையும், குடிநீர் தேவையும் முழுமையாக நிறைவேறும் என இரு மாவட்ட மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

முதல்கட்டமாக அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் வகையில், மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை சேலம் மாவட்டம் ஆத்தூர் வரையிலும், நாமக்கல் மாவட்டத்தின் மல்லசமூத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், எருமபட்டி ஆகிய பகுதிகளுக்கும் இத்திட்டத்தை நீட்டிக்கும் வகையில் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

அதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் வசிஷ்ட நதியையையும் சேர்த்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரை மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்", என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x