Last Updated : 23 Aug, 2019 11:14 AM

 

Published : 23 Aug 2019 11:14 AM
Last Updated : 23 Aug 2019 11:14 AM

கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல்?- காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை

கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து, காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள், கோவைக்கு வந்து சென்றதாகத் தகவல்கள் பரவின. தொடர்ந்து, தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்ததாகவும் இரண்டு பேர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து கோவையில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்தத் திட்டமிட்டதாக மூன்று பேர் மாநகரக் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர் குலைக்கவும், தாக்குதல் சம்பவங்கள் நடத்தவும் தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவினர் மாநில காவல்துறையை எச்சரித்துள்ளனர். அந்த தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மாநிலக் காவல்துறை மூலம் கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்ட காவல் துறையும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ''6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகி்ஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்ற 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த நபர்கள் இலங்கை வழியாகத் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளனர் எனவும், அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரது பெயர் இலியாஸ் அன்வர்'' எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து கோவையில் மாநகரக் காவல்துறையினர், மாவட்ட காவல்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சோதனைச் சாவடிகள் உஷார் படுத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. கோவையில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் புறக்காவல் நிலையங்களில், காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி இன்று கோவைக்கு வருகிறார். இதற்கிடையே சந்தேகத்துக்கு இடமான பொருள் பொது இடங்களில் கிடந்தாலோ, சந்தேகத்துரிய நபர்களைக் கண்டாலோ காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் அளிக்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x