Published : 23 Aug 2019 08:29 AM
Last Updated : 23 Aug 2019 08:29 AM

4 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது: சிஎஸ்ஆர் நிதி மூலம் சாத்தியமாகும் சமூக மாற்றங்கள்!

நிகில் பந்த் படம்:ஜெ.மனோகரன்

க.சக்திவேல்

கோவை

கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, ரூ.500 கோடி நிகர மதிப்புகொண்ட நிறுவனங்கள் அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ரூ.5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள், தங்களது முந்தைய 3 ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் 2 சதவீதத்தை சமூக நடவடிக்கைகளுக்கு (Corporate Social Responsibility - CSR) செலவு செய்ய வேண்டும். இந்தச் சட்டம் 2014 ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட்டது. சமூக பங்களிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை நிறுவனங்கள் நேரடியாக செலவு செய்யலாம் அல்லது தங்களது சொந்த அறக்கட்டளை மூலமாகவும், லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவும் செலவு செய்யலாம்.

இந்நிலையில், ‘சிஎஸ்ஆர் ஸ்பார்க்’ அமைப்பு சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை ஆக்கப்பூர்வமாக செலவிடுவது குறித்த கருத்தரங்கம் கோவையில் அண்மையில் நடைபெற்றது. அதில், பயிற்சியாளராக கலந்துகொண்ட தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி அறக்கட்டளையின் முன்னாள் தலைமை திட்ட அதிகாரி நிகில் பந்த்திடம், சிஎஸ்ஆர் குறித்த கேள்விகளை முன்வைத்தோம். அந்த கேள்விகளுக்கு பதிலளித்து, நிகில் பந்த் கூறியதாவது:

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்குத் தேவையான மனித வளங்களையும், இயற்கை வளங்களையும் இந்த சமுதாயத்தில் இருந்துதான் எடுத்துக் கொள்கின்றன. இதற்கு பிரதிபலனாக சமுதாயத்துக்கு திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைதான் சிஎஸ்ஆர். நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளை நிறுவனங்கள் விவகாரத் துறை (Corporate affairs) அமைச்சகம் கண்காணிக்கிறது. சமூகத்தையும், பெருநிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக சிஎஸ்ஆர் திட்டம் செயல்பட்டு வருகிறது.

கல்விக்கு ரூ.17,128 கோடி

நீர்நிலைகளை தூர்வாருவது, அரசு பள்ளி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகளுக்கு சிஎஸ்ஆர் நிதி செலவிடப்பட்டு வருகிறது. கல்வி, மருத்துவம், ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திறன் வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு இதுவரை அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 4 நிதி ஆண்டுகளில் சுமார் ரூ.50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கல்விக்கு மட்டும் சுமார் ரூ.17,128 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதிக நிதியை செலவிடும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

ஒரு நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் காஷ்மீர் இளைஞர்களுக்கு கவுன்சலிங் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு, அப்பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்தன. இவ்வாறு சிஎஸ்ஆர் நிதி மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். HCL, ONGC போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடங்களைத் தாண்டி, நிதி தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்பாட்டு பணிகளை சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்றன.

மத்திய அரசு பரிந்துரை

நிறுவனங்கள் தங்களது லாப மதிப்பில் இருந்து ஒதுக்கும் 2 சதவீத தொகையை முறையாக செலவிடாவிட்டால் அபராதம், சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு அண்மையில் பரிந்துரைத்திருக்கிறது. இந்த பரிந்துரையின்படி நிதியை முறையாக செலவு செய்யாதவர்களுக்குத்தான் பிரச்சினை. சரியான விதத்தில் செலவு செய்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த பரிந்துரையை பெருநிறுவனங்கள் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இணையதளத்தில் தகவல்கள்

சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் எந்த நிறுவனம் எவ்வளவு செலவழித்துள்ளது, எந்த ஆண்டில் எந்த பணிக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசின் https://www.csr.gov.in/master search.php இணையதளத்தில், அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பொதுமக்களே அறிந்துகொள்ளலாம். இதுதவிர மாநிலங்கள் வாரியாக, மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள், செலவினங் களையும் அறிந்துகொள்ளலாம். மேலும், இந்த இணையதளத்தில் பதிவு செய்திருந்தால், அந்த பயனாளிகளிடம் இருந்தும் நிறுவனங்கள் கருத்துகளைக் கேட்க முடியும். இவ்வாறு அனைவருக்கும் தகவல் கிடைப்பதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவும், நிறுவனத்தின் தகவல் தரத்தை மேம்படுத்தவும், சிறந்த ஆலோ சனைகளை நிறுவனங்களுக்கு வழங்கவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.அனைவருக்கும் தகவல் கிடைப்பதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவும், நிறுவனத்தின் தகவல் தரத்தை மேம்படுத்தவும், சிறந்த ஆலோ சனைகளை நிறுவனங்களுக்கு வழங்கவும் முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x