Published : 22 Aug 2019 08:34 PM
Last Updated : 22 Aug 2019 08:34 PM

பட்டியல் இனத்தவர் உடலை கொண்டுச் செல்ல அனுமதி மறுப்பு; உடலை பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கிய விவகாரம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வேலூரில் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை கொண்டு செல்ல பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தொட்டில் கட்டி பாலத்தில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த குப்பன், ஆகஸ்ட் 19-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மறுநாள் (ஆகஸ்ட் 20) குப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் உடலை எடுத்துச்சென்றனர்.

ஆனால் குறிப்பிட்ட பகுதி வழியாக உடலை எடுத்துச் செல்ல அப்பகுதியில் வசிக்கும் பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பகுதியிலிருந்த ஒரு மேம்பாலத்தின் வழியாக உடலை தொட்டில் கட்டி கீழே இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று உறவினர்கள் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், வரும் 26-ல் இதுகுறித்து பதிலளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x