

தேனி,
வைகை அணையை தூர்வாருவது எளிதான காரியமல்ல. உலகின் எந்த அணையும் இதுவரை தூர்வாரப்பட்டது கிடையாது என்று சட்டப் பேரவை பொதுக்கணக்குக் குழுத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழுவின் சார்பில் தேனி மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) ஆய்வுப்பணிகள் நடைபெற்றது.
தலைவர் துரைமுருகன் தலைமையில் உறுப்பினர்கள் உதயசூரியன், கீதா, நடராஜ், பரமசிவம், பழனிவேல் தியாகராஜன், பாஸ்கர், முஹம்மது அபுபக்கர், மோகன், ராஜா, செயலர் சீனிவாசன் உட்பட பலர் இப்பணியில் ஈடுபட்டனர்.
வைகை அணை, பசுமை வீடு, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்டு பின்பு ஆய்வுக்கூட்டம் நடத்தினர். ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் முன்னிலை வகித்தார். எம்பி.ரவீந்திரநாத்குமார், எம்எல்ஏ.மகாராஜன்,சரவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நெடுஞ்சாலைத் துறையில் ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இன்னொரு திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. மேகலைப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். யானையால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க உரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
பின்பு குழுத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வைகை அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 17 ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை அணையைத் தூர்வாருதல் லேசான காரியமல்ல.
எந்த நாட்டு அணையும் இதுவரை தூர்வாரப்பட்டதில்லை. பொதுவாக அணைகளில் மணல்போக்கி என்ற அமைப்பு மூலம்தான் மணல் தனியே செல்லும். தேனி மாவட்ட திட்டப்பணிகளின் தன்மை குறித்து இப்போது சொல்ல முடியாது. அரசிற்கு அறிக்கையாக தாக்கல் செய்வோம்.
ஒரு நாளில் மாவட்டத்தின் அத்தனை திட்டங்களையும் ஆய்வு செய்ய வாய்ப்பில்லை. குறிப்பிட்டவற்றை மட்டும் பார்வையிட்டுள்ளோம். பல ஆண்டுகளாக வனப்பகுதியில் வசிப்பவர்களை திடீரென்று வெளியேற்றுவது சரியல்ல.
அவர்களுக்கு வீடு, குடிநீர் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். விவசாய மாவட்டம் என்பதால் சிறுதானிய இயக்கம், இடுபொருள் உள்ளிட்ட பல்வேறு திடங்களும் ஆய்வு செய்ப்பட்டது" என்றார்.
பின்பு தனியாக செய்தியாளர்களைச் சந்தித்து, ப.சிதம்பரம் கைது குறித்து கேட்டபோது, "இந்த வழக்கில் வாதாடி வெளியே வரக்கூடிய திறன் அவருக்கு உண்டு. இருப்பினும் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்றார்.