Published : 22 Aug 2019 05:14 PM
Last Updated : 22 Aug 2019 05:14 PM

முனைவர் பட்டம் பெற்றார் தொல். திருமாவளவன்

திருநெல்வேலி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 27-வது பட்டமளிப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை மூலம் தொல். திருமாவளவன் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார்.
1980-ம் ஆண்டுகளில் தென்காசி அருகே மீனாட்சிபுரம் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியது தொடர்பான 284 பக்க ஆய்வறிக்கையை திருமாவளவன் தாக்கல் செய்தார்.

இதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்று விளக்கங்களையும், ஆய்வு முடிவையும் அவர் தெரிவித்திருந்தார். அவரது ஆய்வுக்கட்டுரை குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன.

அப்போது பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், "பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு உட்பட்டு முனைவர் பட்ட ஆய்வை அவர் மேற்கொண்டிருந்தார். அவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்பதால் இதை சிலர் அரசியலாக்கியிருந்தனர். ஆனால் எந்த பொய்யான தகவல்களையும் அந்த ஆய்வில் அவர் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே செய்யப்பட்டிருந்த ஆய்வு எதையும் அவர் காப்பி அடிக்கவும் இல்லை. எனவே இதை அரசியலாக்க கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் தொல். திருமாவளவனுக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கப்பட்டது.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "காஷ்மீர் பிரச்சினையை வலியுறித்தி சென்னையில் ஆகஸ்ட் 30- ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

சிதம்பரத்தை கைது செய்துள்ளது அநாகரீகமானது. 7 மாதங்களாக ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு அலைக்கழிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிராகரிக்கபட்டது. இப்போது அவர் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x