Last Updated : 22 Aug, 2019 03:30 PM

 

Published : 22 Aug 2019 03:30 PM
Last Updated : 22 Aug 2019 03:30 PM

விதவிதமான தோற்றங்கள் வித்தியாசமான வடிவங்களில் விருதுநகரில் தயாராகும் விநாயகர் சிலைகள்: புதுவரவாக அத்திவரத ராஜ கணபதி சேர்ப்பு

விருதுநகர்,

விநாயாகர் சதுர்த்திக்காக விருதுநகர் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு இவ்விழா செப்டம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

தொடக்கத்தில் வடமாநிலங்களில் மட்டுமே வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவந்த விநாயகர் சதுர்த்தி விழா அண்மை காலமாக தென் மாநிலங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு விநாயகர் சிலை அமைப்பதில் அரசு பல்வேறு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த ஆண்டு விநாயர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்து முன்னணி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து வழிபடுவதற்காக திருத்தங்கல் பகுதியில் 2560க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த கைவிணைக் கலைஞர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காகித கூழால் குறைந்தபட்சம் மூன்றரை அடி உயரத்திலிருந்து அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், மூஞ்சூறு விநாயகர், காளை விநாயகர், பசு விநாயகர், மான் விநாயகர், மயில் விநாயகர், பாம்பு விநாயகர், சிவன்- பார்வதியுடன் கூடிய விநாயகர், சித்தி-புத்தி விநாயகர், சரஸ்வதி- மகாலட்சுமியுடன் கூடிய விநாயகர், 3 தலை மற்றும் 5 தலை விநாயகர், நரசிம்ம விநாயகர், அனுமன் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், காகிதக் கூழால் தயாரிக்கப்பட்டு விநாயகர் சிலைகளுக்கு வாட்டர் கலர் மட்டுமே பூசப்படுவதால் சிலைகளை கரைக்கும் போது நீர் நிலைகளுக்கோ, சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாது என்கிறார்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவிணைக் கலைஞர்கள்.

இதேபோன்று, ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பிலும் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார்செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிய வரவாக அத்திவரத ராஜ கணபதி, சூரசம்கார கணபதி, விவசாய கணபதி, ஜீப் ஓட்டும் விநாயகர், ரயில் ஓட்டும் விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x