Published : 22 Aug 2019 02:46 PM
Last Updated : 22 Aug 2019 02:46 PM

அன்பாசிரியர் செல்வக்கண்ணனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.

இதில் அன்பாசிரியர் 27: செல்வக்கண்ணன்- ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் என்ற தலைப்பில் ‘இந்து தமிழ்’ இணையத்தில் செய்தி வெளியானது. அவருக்குத் தற்போது தேசிய நல்லாசிரியர் விருது கிடைக்க உள்ளது.

கரூர் மாவட்டம், பரமத்தியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன். சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்துடன் கம்பீரமாக இயங்கி வரும் இப்பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.

ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க் குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச் சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது. இவை அனைத்துக்கும் பின்னால் அமைதியாக, அதே சமயத்தில் ஆற்றலுடன் இயங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.

''என் இரு மகள்களும் அரசுப் பள்ளியிலேயே படித்ததால் என் பள்ளிக்கு நிறைய செய்ய முடிந்தது'' என்று பெருமிதப்படும் ஆசிரியர் செல்வக்கண்ணன், மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, காலணி, சாக்ஸ், பெல்ட், அடையாள அட்டை ஆகியவற்றை சொந்த செலவில் வாங்கிக் கொடுப்பவர். பள்ளிக்கு சுற்றுச்சுவர், சிமெண்ட் தரை ஆகியவற்றிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரத்தை உயர்த்திய அன்பாசிரியர் செல்வக்கண்ணனுக்கு தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மகிழ்வுடன் 'இந்து தமிழ்' இணையத்திடம் பகிர்ந்துகொண்ட அவர், ''ஓர் ஆசிரியருக்கான உச்சபட்ச அங்கீகாரம் தேசிய நல்லாசிரியர் விருதுதான். ஆசிரியப் பணியை உளப்பூர்வமாகச் செய்ததற்குக் கிடைத்துள்ள பரிசாக இதைப் பார்க்கிறேன்.

இனியும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அதற்கான தூண்டுதலாக இந்த விருது இருக்கும். எந்தவொரு விருதோடும் எனது பயணம் நின்றுவிடப் போவதில்லை. விருதுகளை எதிர்பார்த்தும் எதையும் செய்யவில்லை. ஆனால் இதை இடையில் இளைப்பாறக் கிடைத்த ஆசுவாசமாகக் கருதுகிறேன்.

மீண்டும் இதே பாதையில் இன்னும் சிறப்பாகப் பயணிக்க இந்த விருது பயன்படும். குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் சொல்லி, நிறையப் பேர் பள்ளிக்கே வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த விருதாக இதைப் பார்த்து மகிழ்கின்றனர்'' என்று பரவசப்படுகிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x