Published : 22 Aug 2019 01:43 PM
Last Updated : 22 Aug 2019 01:43 PM

ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை

ப.சிதம்பரத்தை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத்துறையும் நேற்றிரவு அவரது வீட்டில் புகுந்து வலுக்கட்டாயமாக கைது செய்து, சிபிஐயின் கட்டுப்பாட்டில் அடைத்து வைத்துள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நேர்மையற்ற பழிவாங்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஏற்கெனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். அவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள சூழ்நிலையில், அவசர கதியில் அவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, பயங்கரவாதியை கைது செய்வது போல சுற்றிவளைத்து கைது செய்துள்ளதானது கண்டனத்திற்குரியதாகும்.

ப.சிதம்பரம்: கோப்புப்படம்

பதவியிலிருக்கும் போது தவறுகள் இழைக்கப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்டவர் யாராயிருப்பினும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு கைது செய்வது தவறானதல்ல. ஆனால், ப. சிதம்பரத்தை கைது செய்திருக்கும் விதம் மற்றும் அவரை கைது செய்தே ஆக வேண்டும் என்பதில் காட்டப்பட்டிருக்கும் தீவிரம் அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கையேயாகும்.

எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்துவதற்கும், காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதற்கும் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜக அரசு சட்டநியதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது", என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x