

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்தத்தலைவர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வந்தது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் நேற்று இரவு முழுவதும் அரசியல் பரபரப்பு காணப்பட்டது. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னையில் நேற்றிரவு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இன்றும் தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னை அடையாறு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் பேசிய கராத்தே தியாகராஜன் “எந்தவித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார், வரும் காலத்தில் காங்கிரஸை வழிநடத்தும் அளவிற்கு தகுதியானவர் ப.சிதம்பரம் . அவரது கைது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார். பின்னர் ப.சிதம்பரம் விவகாரத்தில் அண்ணன் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
“திமுக பிரதான எதிர்க்கட்சி அண்ணன் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக கண்டித்து அறிக்கை வெளியிடாதது வருத்தமாக உள்ளது, அவர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்தபோது சிதம்பரம் முதல் ஆளாக தொலைக்காட்சியில் அதைக் கண்டித்தார், ஆனால் இன்று சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் இதுவரை கூட்டணிக்கட்சித்தலைவர் அண்ணன் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
கராத்தே தியாகராஜன் ஆரம்பத்தில் திமுகவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டார். பின்னர் சட்டப்பேரவைத்தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சமரசமானார். ஏதாவது அதிரடியாக கருத்தைச் சொல்லி பரபரப்பான அரசியல் செய்யும் தியாகராஜன் திமுக கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தற்போது மீண்டும் சிதம்பரம் கைது விவகாரத்தில் நேரடியாக ஸ்டாலினை குறைச் சொல்லியிருக்கிறார். இதற்கு சமூக வலைதளங்களில் திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரம் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.