Published : 22 Aug 2019 12:50 PM
Last Updated : 22 Aug 2019 12:50 PM

ப.சிதம்பரம் கைது; அரசின் கொள்கைகளை, திட்டங்களை விமர்சிக்கும் அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கை: கி.வீரமணி கண்டனம்

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

ப.சிதம்பரத்தை சுவர் ஏறிக் குதித்து சிபிஐ கைது செய்தது நாகரிகமா? தீவிரவாதி, சமூக விரோதிப்போல் சித்தரிக்கும்போக்கு என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

"காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சரும், இந்நாள் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரில் முன்னணி விமர்சகர்களில் ஒருவருமான மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் மீது பாஜக அரசு சிபிஐ மூலம் வழக்குகள் தொடுத்துள்ளது.

சில வழக்குகளில் அவர் விசாரணைக்குச் சென்று, அவரைக் கைது செய்யக் கூடாது என்று பலமுறை அவகாசமும் கொடுத்து, வழக்கு விசாரணை தொடர்ந்தது.

ஒரு குறிப்பிட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது முன்ஜாமீன் மனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. அவர் மறுசீராய்வு மனுவை தனது வழக்கறிஞரின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, உடனடியாக அது விசாரணைக்கு வராமல், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இடையில் ஒரு நாள் இருக்கும் நிலையில், "அவர் தலைமறைவு, தேடப்படும் குற்றவாளி" என்று அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அவர் ஓடி ஒளியவோ, தலைமறைவாகவோ இல்லை; நேற்று மாலை டெல்லி அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில், "வழக்கறிஞர்களுடன் அடுத்தக்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கான ஆலோசனைப் பணியில் ஈடுபட்டிருந்தேன். சட்டத்தை மதிப்பவன் நான்" என்று ஒரு அறிக்கையை வாசித்தார். பிறகு வீடு திரும்பிய நிலையில், சிபிஐ தொடர்ந்து சென்று அவரைக் கைது செய்தது.

ப.சிதம்பரம்: கோப்புப்படம்

சிபிஐ அதிகாரிகளுக்குக் கடமையை நிறைவேற்றிடும் பொறுப்பு உண்டு என்றாலும், இரவில் அவருடைய வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, சிதம்பரம் ஏதோ ஒரு பயங்கரவாதி, தீவிரவாதி, சமூக விரோதி என்ற தோற்றத்தை உருவாக்குவதுபோல நடந்துகொண்டதை, நடுநிலையாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்வதில் அரசியல் வன்மமோ, காழ்ப்புணர்வோ அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல நடந்திருப்பது நியாயமானதல்ல.

அவரை மட்டும் அச்சுறுத்துவதற்காக அல்ல!

இது அவரை மட்டும் அச்சுறுத்த அல்ல. அரசின் கொள்கைகளை, திட்டங்களை விமர்சிக்கும் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு முறையாகவும் கையாளப்படுகிறது. இதை ஜனநாயகவாதிகளும், அரசியல் சட்ட மாண்புகளை மதிப்போரும் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள். ஜனநாயகம், கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படக் கூடாது. சிறந்த சட்ட நிபுணரும், வழக்கறிஞருமான சிதம்பரம் சட்டப்படி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வார் என்பது உறுதி", என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x