

புதுச்சேரி
தவறு செய்தால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும் என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று (ஆக.22) அரவிந்தர் ஆஸ்ரமம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட தடை விதிக்க முடியாது என நேற்று உயர் நீதிமன்றம் மறுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், "வழக்கு விசாரணையில் உள்ளது.செப்டம்பர் 4-ம் தேதி மறுவிசாரணை வருகின்றது, முடிவு என்ன வருகின்றது என காத்திருப்போம்", என்றார்.
தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது விவகாரம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "முன்னாள் உள்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும் ப.சிதம்பரம் பதவி வகித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் சிபிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்காது. அதன் ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்து தான் பிணை வழங்கலாமா அல்லது வழங்கக்கூடாதா என்பதை முடிவு செய்கின்றது.
ப.சிதம்பரம்: கோப்புப்படம்
இதிலிருந்து வலிமையான பாடத்தை நாம் கற்கின்றோம் இது பாடம் கற்கும் விவகாரமாகவும் உள்ளது. தலைமை பண்பு என்பது பதவி கிடையாது. அது ஒரு பொறுப்பு. அது வெளிப்படைத் தன்மை மற்றும் மக்களுக்கான நலன் தொடர்பானதாகும். தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும். நன்மை செய்தால் அதற்கான வெகுமதியை தானாகவே இயற்கை வழங்கும்", என்று தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்