Published : 22 Aug 2019 10:45 AM
Last Updated : 22 Aug 2019 10:45 AM

முத்துக்கு முத்தாக...  சொத்துக்கு சொத்தாக... 7 தலைமுறை உறவினர்கள் ஒன்றுகூடிய விழா!

கி.பார்த்திபன்

தமிழர்களின் வாழ்வியல் முறைகளில் ஒன்று கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, பேரன், பேத்தி என நீளும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, உறவுகளின் பிணைப்பை பலப்படுத்துவதுடன், அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உறவுகளின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லும் வகையிலும் அமைந்திருந்தது.

ஆனால், இன்றைய நவீன மற்றும் அவசர உலகம், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை சிதைத்துவிட்டது. பணிச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உறவுகளைப் பிரிந்து, வெளியூர்களில் தனித்தனி தீவுகள்போல அமைந்துள்ளது இன்றைய வாழ்க்கை முறை.

கூட்டுக் குடும்பங்களை காண்பதே அரிதாக உள்ள இச்சூழலில், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆர்.முத்துநல்லியப்பன், ஏழு தலைமுறையைச் சேர்ந்த உறவினர்களை ஒன்று திரட்டி விழா நடத்தி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஆண்டுதோறும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அவரிடம் பேசினோம்.

“தொ.ஜேடர்பாளையம்தான் எனது சொந்த ஊர். விவசாயத்தைப் பின்னணியாக கொண்ட குடும்பம். பணி ஓய்வுக்குப் பின், நானும் தற்போது விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். கூட்டுக் குடும்பமாக இருந்த நமது வாழ்க்கைமுறை தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. மீண்டும் அந்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்வது கடினம்தான்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறையாவது உறவுகளை ஒன்று திரட்டி, விழா நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக கடந்த ஓராண்டாக முயற்சிகளை மேற்கொண்டேன். இதன் பலனாக 7 தலைமுறையைச் சேர்ந்த உறவினர்களை ஒன்று திரட்ட முடிந்தது. பலர் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் 199 ஆண்டுகளாக நீடிக்கும் உறவினர்கள்.
முப்பாட்டன் காலத்து வாரிசுகள் முதல், தற்போது வரையிலான உறவினர்களை ஒன்று திரட்டினேன். 1824-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான குடும்ப வாரிசுகள் ஒன்றிணைக்கப்பட்டனர். ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்டோரை தொடர்புகொண்டு, விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தேன். ராசிபுரத்தில் உள்ள திருமண மண்படத்தில் விழா நடைபெற்றது.

இதில், முதியவர்கள் முதல் தற்போதைய தலைமுறையான குழந்தைகள் வரை ஒன்று திரண்டோம். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்று, வாழ்த்திப் பேசினர். உறவினர்கள் கூடி மகிழ்வது மட்டுமின்றி, புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடும்ப அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இதுபோல உறவினர்கள் ஒன்றுகூட முடிவு செய்யப்பட்டது. தமிழர் கலாச்சாரம், பண்பாடு, கூட்டுக் குடும்ப முறை, கிராம வாழ்க்கை போன்றவற்றை இளைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த விழாவை நடத்தினோம். இது, ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டது மட்டுமின்றி, உறவுகளை பலப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x