Published : 22 Aug 2019 10:42 AM
Last Updated : 22 Aug 2019 10:42 AM

பயணங்கள் முடிந்துவிடுமோ?- தத்தளிக்கும் வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள்

ஆர்.கிருஷ்ணகுமார்

வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஜாப் ஆர்டர்கள் வருவது பெருமளவு குறைந்துவிட்டதால், வாகனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இவற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பதாக குமுறுகின்றனர் சிறு, குறுந் தொழில்முனைவோர்.

இந்தியாவில் `ஆட்டோமொபைல்ஸ்’ எனப்படும் வாகன தயாரிப்புத் துறை, பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும் இது உள்ளது. மேலும், வாகனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து, `ஆட்டோமொபைல்ஸ்’ துறை பெரும் வளர்ச்சியை எட்டியிருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக வாகனங்களின் விற்பனை சரியத் தொடங்கியது.

வாகன விற்பனை சரிவு!

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 2.91 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜூலை மாதம் 2 லட்சம் பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதாவது 31 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. குறிப்பாக, கார்களின் விற்பனையில் 36 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல, இருசக்கர வாகனங்களின் விற்பனையும் குறைந்துவருகிறது.
இவ்வாறு வாகனங்களின் விற்பனை குறைந்துள்ள நிலையில், உற்பத்தியும் பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், வாகனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜெ.ஜேம்ஸிடம் பேசினோம். “கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவிலேயே இந்த அளவுக்கு சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் இருக்கும் மாவட்டம் கோவைதான். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும், சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.

ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள், வெட் கிரைண்டர்கள், இன்ஜினீயரிங் உதிரி பாகங்கள், ராணுவ தளவாடங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் என பல்வேறு உதிரி பாகங்களைத் தயாரித்தாலும், ஆட்டோமொபைல்ஸ்-க்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு கோவையில் பிரசித்தி பெற்றது. ஏறத்தாழ 15 ஆயிரம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் உதிரி பாகங்களைத் தயாரிக்கின்றன.

உதிரி பாகங்கள் உற்பத்தி!

வாகனங்களுக்கான கியர் பாக்ஸ், சிலிண்டர், பிரேக் ட்ரம், பிரேக் ஷூ, செயின் பிளேட், ஜாயின்ட், கனெக்டிங் ராடு மற்றும் நட்டு, போல்டு உட்பட பல்வேறு உதிரி பாகங்கள் கோவையில் தயாராகின்றன. இவை டெல்லி, சென்னை, ஓசூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள, வாகன தயாரிப்பில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. வட இந்தியாவில் செயல்படும் கார், வேன் மற்றும் கனரக வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு, கோவையிலிருந்து அதிக அளவில் உதிரி பாகங்கள் அனுப் பிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் செயல்படும் ஃபவுண்டரி நிறுவனங்களுக்கு, பெரிய நிறுவனங்கள் ஆர்டர்களைத் தருகின்றன. இவை, இங்குள்ள சிறு, குறுந் தொழில்முனைவோருக்கு ஜாப் ஆர்டர் முறையில், உதிரி பாகங்களைத் தயாரிக்கும் பணியை வழங்குகின்றன. இதை நம்பி சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.300 கோடி அளவுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஆர்டர்கள் குறைந்தன!

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்களை வழங்கி வந்த நிறுவனங்கள், உற்பத்தி வேகத்தை குறைக்குமாறு வலியுறுத்தின. ஆர்டர் கொடுப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஆரம்பத்தில் மூன்று ஷிப்டுகளில் தொழிலாளர்கள் பணியாற்றினர்.

உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிர்பந்தத்தால், ஒரு ஷிப்ட் மட்டுமே உற்பத்தி நடைபெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஜாப் ஆர்டர்கள் குறைந்துவிட்டன. இதனால் பெரும்பாலான நிறுவனங்களில் 90 சதவீத உற்பத்தி குறைந்துவிட்டது.

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்பதை விளக்கி, அவரவர் சொந்த ஊருக்கே அனுப்பிவிட்டோம். மேலும், ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல், சம்பளம் மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பதுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

பல தொழில்முனைவோர் வங்கிகளில் கடன் வாங்கித்தான், தொழிலை நடத்தி வந்தன. நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களாக வங்கிக் கடன், வட்டியை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி, நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. மீண்டும் தொழில் துறை சகஜமடைய 7 மாதங்கள் முதல் ஒரு வருடமாகும் என்று தொழில் துறை நிபுணர்கள் தெரிவிப்பது, எங்களை மிகப் பெரிய வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. பல சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

ஜிஎஸ்டி காரணமா?

இந்த நெருக்கடிக்கு, ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி முக்கியக் காரணமாகும். ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பின்னர், வாகனங்களின் விலை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் விற்பனை பெரிதும் சரிந்துவிட்டது. எனவே, ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
வங்கிகளில் நாங்கள் வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் வாகனங் கள் வாங்குவதையும், உதிரி பாகங்கள் கொள்முதலையும் தீவிரப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளையும் மத்திய அரசு அழைத்துப் பேசி, நெருக்கடி நிலைக்கு உரிய தீர்வுகாண வேண்டும்.

ஏற்கெனவே, பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் சிறு, குறுந்தொழில்முனைவோர், தற்போதைய புதிய நெருக்கடியால் செய்வதறியாது திகைக்கின்றனர். இந்த நிலை தொடருமானால், வேலையின்மை சூழல் மிகப் பெரிய பிரச்சினையை உருவாக்கும். தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கும்போது, பல்வேறு போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இதை சாதாரண பிரச்சினையாக கருதாமல், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, போர்க்கால அடிப்படையில் தீர்வைக்காண மத்திய அரசு முன்வருவது அவசியம்” என்றார் ஜெ.ஜேம்ஸ்.
மக்களின் பயணத்துக்கான வாகனங்களை தயாரித்துக் கொடுப்பவர்கள், தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியாத நிலைக்கு உள்ளாகி, தவிக்கும் சூழல் கவலைக்குரியது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்து, நிரந்தரத் தீர்வைக்காண வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x