Published : 22 Aug 2019 08:11 AM
Last Updated : 22 Aug 2019 08:11 AM

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் செப்.1 முதல் தொடங்குகிறது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவிப்பு 

சென்னை

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி அம்மாத இறுதியில் முடியும். இந்த ஆண்டு, ஆகஸ்ட் 16-ம் தேதியே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அப்பணிகளை செப்.1 முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு, பிழையில்லாத வாக்காளர் பட்டி
யலை தயாரிக்கும் விதமாக, வாக்காளர்கள் சரிபார்த்தல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, சிறப்பு திருத்தப்பணிகள் வரும் செப்.1 முதல் 30 வரைநடத்தப்படுகிறது. அப்பொழுது வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்க்கும் விதமாக ஆவணங்களை அளிக்க வேண்டும்.

அதன்படி, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், ஆதார், குடும்ப அட்டை, பான் அட்டை, மாவட்ட நிர்வாகம் அளித்த பிறப்புச்
சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் பிறந்த தேதியுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ், வங்கி, கிசான், அஞ்சலக கணக்கு புத்தகம், வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ததற்கான அத்தாட்சி ஆவணம், சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்புக்கான கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தை அளிக்கலாம்.

இதுதவிர, வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் உதவி எண், செல்போன் செயலி, தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல், பொது சேவை மையங்கள், ஆகியவற்றில் சரிபார்க்கலாம்.

திருத்தம், முகவரி, புகைப்படமாற்றம் இவற்றுக்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் நேரடியாக வாக்காளர் பதிவு அதிகாரியிடம் அளிக்கலாம். பதிவு செய்யாதவர்கள், இறந்த வாக்காளர் விவரங்களை வீடுவீடாகச் சென்று வாக்காளர் அலுவலர்கள் பெறுவார்கள். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x