கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட 791 தொழிலாளர்களுக்கு ரூ.1.21 கோடி நிவாரணம்: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தகவல் 

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு பயிற்சி பட்டறையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன், தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுனில் பாலிவால், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.மனோகரன், திருவண்ணாமலை ஆட்சியர் க.சு.கந்தசாமி மற்றும் கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள் யாஷ்மின் பேகம், சரவணன்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு பயிற்சி பட்டறையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன், தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுனில் பாலிவால், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.மனோகரன், திருவண்ணாமலை ஆட்சியர் க.சு.கந்தசாமி மற்றும் கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள் யாஷ்மின் பேகம், சரவணன்.
Updated on
1 min read

சென்னை

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீட்கப்பட்ட 791 கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 48 ஆயிரம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறை, சென்னை தியாகராய நகரில் நடந்தது. இந்நிகழ்ச்சியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்படும்போது, அவர்களுக்கான பொருளாதார சமூக நிவாரணங்களை வழங்கி, அவர்களை முன்னேற்றுவதற்காக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம், மத்திய அரசின் கொத்தடிமை தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து தொழிலாளர் உதவிஆணையர்களும் அவர்கள் நிர்வாக எல்லையில், கொத்தடிமைதொழிலாளர் ஒழிப்பை அமல்படுத்த ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மறுவாழ்வு நிவாரணத் தொகையாக ரூ.20 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா,வேலைவாய்ப்பு கல்வி, தொழில்திறன் பயிற்சி, சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர், மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொத்தடிமை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்ட ஆண் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், சிறப்பு பிரிவு பயனாளிகள் அதாவது பிச்சை எடுப்பதில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், அனாதைக் குழந்தைகள், கட்டாய குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.2 லட்சமும், திருநங்கைகள், ஆள்கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சமும் மறுவாழ்வு நிவாரணத் தொகையாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டில் 276 கொத்தடிமை தொழிலாளர்கள், 2018-19-ம் ஆண்டில் 352, இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31 வரை 163 தொழிலாளர்கள் என மொத்தம் 791 கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 48 ஆயிரம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, தொழிலாளர் துறையில் கருணை அடிப்படையில் 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை செயலர் சுனீல் பாலிவால், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, தொழிலாளர் கூடுதல் ஆணையர்கள் பா.மு.சரவணன், யாஸ்மின் பேகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in