

சென்னை
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலகக் கட்டிடங்களி்ல் ஒரு மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மாநில அளவில் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்
கள், தொழிற்சாலை கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும், சாலைஓரங்களிலும், பொது இடங்களிலும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குமிடங்களைக் கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை விரைவாக உருவாக்க வேண்டும்.
மேலும், நீர் நிலைகள் மற்றும்குளங்களைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் சேகரிக்கப்படும் மழைநீர், நேரடியாக இந்த நீர் நிலைகளில் சென்று சேர வேண்டும். ஊரகவளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 70 ஆயிரத்து 368 சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் உள்ளன. இவற்றை முறையாக பராமரித்து, மழைநீரை சேகரிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 2011 முதல் 2015 வரை ரூ.2,200 கோடி மதிப்பில், 50,767 சிறுபாசன ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும், 2016-ல் இருந்து 2018-க்குள் ரூ.877 கோடி மதிப்பில் 16,508 சிறுபாசன ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன.
கடந்த 2 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 347 தடுப்பணைகள் ரூ.485 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மூலம் ரூ.312 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள, 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
மாநில நிதி ரூ.500 கோடியில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகள், 25 ஆயிரம் குளங்கள், குட்டைகள் தூர்வாரும் பணிகள், கரைகள் பலப்
படுத்தும் பணிகள், மதகுகள், கலங்கல்களை ரூ.750 கோடியில் சீரமைக்கும் பணிகளையும் செப்டம்பர் மாதஇறுதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் க.பாஸ்கரன், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.