

சென்னை
வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் பாதியில் நிற்கின்றன. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
சென்னை - அரக்கோணம் தடத்தில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ரயில் நிலையத்தையொட்டி கொளத்தூர், பாடி போன்ற முக்கிய பகுதிகள் இணைக்கப்படுகின்றன. இதனால், இந்த ரயில் நிலையத்தை பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
அதுபோல், இங்குள்ள ரயில்வே கேட்டை தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்த ரயில் கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசலும், சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே, இந்த கேட்டை அகற்றிவிட்டு, மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, இங்கு மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி, ரயில்வே கேட்கள் இழுத்து மூடப்பட்டு, கடந்த ஆண்டுஜூலை 15-ம் தேதி மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. அடுத்த சில மாதங்களில், மேம்பாலம் அமைக்க தேவையான பில்லர்கள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு, அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடக்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சிலர் கூறும்போது, ‘‘அண்ணாநகர், ஐசிஎஃப், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொளத்தூர், பூம்புகார் நகர், செங்குன்றம் பகுதிகளுக்குச் செல்ல இந்த கேட் பிரதான வழியாக இருந்தது. இந்தத் இடத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முன்பே மாற்றுப்பாதை வசதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால், மேம்பாலப் பணிகளில் எந்தத் தொய்வும் ஏற்படாது, பணிகள் 8 மாதங்களிலேயே முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை மேம்பாலத்துக்கான பில்லர்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பணிகள் நடக்காமல் இருக்கின்றன.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்து கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்றனர்.