

சென்னை
தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்வதைக் கண்டித்து நேற்று தொடங்கிய தமிழ்நாடு தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலை
கள் தனியார் குடிநீர் லாரிகளை பெரிதும் நம்பியுள்ளனர். சென்னையில் ஓடும் சுமார் 5 ஆயிரம் லாரிகள் உட்பட தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் தனியார் குடிநீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லாரிகளுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயக் கிணறுகளே முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன.
"இவர்கள் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் கீழே செல்கிறது. அதனால் தங்களுக்கு தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருக்கிறது" என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுவதுடன் தண்ணீர் எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்
துறையினரும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். எனவே, தொழில் செய்ய முடியாமல் அவதிப்படுவதாகக் கூறிய தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள், நிலத்தடி நீர் எடுப்பதற்கு முறையான அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் துறையினர் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்து தமிழ்நாடு தனியார் குடி
நீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
இதையடுத்து அவர்களை அழைத்து அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் கூறியதாவது:-
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது காவல்
துறையினர் திருட்டு வழக்கு பதிவு செய்கின்றனர். இதனால் ஓட்டுநர்கள் பணிக்கு வராத நிலையில், லாரிகளை இயக்க முடியவில்லை. போலீஸாரின் இப்போக்கைக் கண்டித்து புதன்கிழமை முதல் (ஆக.21) மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினோம். இதையடுத்து சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிகரன் முன்னிலையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம். அதன்படி, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி கோரிய 90 நாட்களில் அனுமதி வழங்குதற்கான தற்காலிக அரசாணை வெளியிடப்படும். மேலும், குறிப்பிட்ட பகுதிகளை முறையாக ஆய்வு செய்த பிறகு, நிரந்தர அரசாணை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் கூறினார்.