Published : 22 Aug 2019 07:45 AM
Last Updated : 22 Aug 2019 07:45 AM

சிறப்பு குறைதீர் திட்ட முகாம் இன்று தொடக்கம்: மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை; சென்னையில் வரும் 29-ம் தேதி வரை நடக்கிறது

சென்னை

சென்னையில் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகரப்பகுதிகளில் வார்டுதோறும் மற்ற பகுதிகளில் கிராமம்தோறும் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று தீர்வு காண வகை செய்யும் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும். இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் தீர்வு எட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ் கடந்த ஜூலை 18-ம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வருவாய்த் துறையில் இத்திட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு. முகாம்களை நடத்த, ஒரு வட்டத்துக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 305 வட்டங்களுக்கு ரூ.76 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் சென்னையில் உள்ள 16 வட்டங்களுக்கு ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு மற்றும் கிராமம்தோறும் மண்டல துணை வட்டாட்சியர் அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்கள் தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காண அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் இத்திட்டத்தை சேலத்தில் முதல்வர் பழனிசாமி கடந்த ஆக.19-ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து இத்திட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னையில் இம்முகாம் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்ட் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 விடுமுறை நாட்களில் குறைதீர் முகாம் நடக்காது. பல்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மனுக்களை பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் மீது ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும்.

மேலும், இந்த திட்டத்தின்கீழ் மக்களின் அடிப்படை தேவைகளான சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகள் தொடர்பான மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்தில் கண்டறியப்படும் பயனாளிகள் அனைவருக்கும் வட்ட அளவில் அமைச்சர்கள் தலைமையில் நடக்கும், சிறப்பு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x