

சென்னை
தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும்
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 15 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடுமுழுவதும் இந்த ஆண்டில் டெங்குவால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் 1,400 பேரும், தமிழகத்தில் 1,300 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த
வும், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க பயன்படுத்தாத டயர், உடைந்த சிமென்ட் தொட்டிகள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் தட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கும்படி உள்ளாட்சி அமைப்புகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.