Published : 22 Aug 2019 07:32 AM
Last Updated : 22 Aug 2019 07:32 AM

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதுவரை 6 லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை

தமிழகத்தில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு 400 சதுரஅடி பரப்பில் இது வரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வடசென்னை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கேசவப்பிள்ளை பூங்கா, பி.எஸ்.மூர்த்தி நகர், கிரே நகர் பள்ளம், மூர்த்திங்கர் தெரு திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளையும், கட்டி ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2013-ம் ஆண்டு தொலை நோக்குத் திட்டம்-2023-ஐ வெளியிட்டார். அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழகத்தின் குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு 400 சதுரஅடியில், வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கேசவப்பிள்ளை பூங்கா பகுதியில் கடந்த 1981-82-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டு, சிதிலமடைந்திருந்த 1,536 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, முதல்கட்டமாக 672 வீடுகளும், அடுத்து 864 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டன. இந்த வீடுகளில் ஒரு மாதத்தில் பயனாளி
கள் குடியேற உள்ளனர். இதே பகுதியில் மேலும் 1,056 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

கிரே நகர் பள்ளம் பகுதியில் கடந்த 1975-ல் கட்டப்பட்ட 448 குடியிருப்புகளை இடித்து விட்டு, அதே பகுதியில் புதிய குடியிருப்பு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல், பி.எஸ். மூர்த்தி நகரில் கடந்த 1975-ல் கட்டப்பட்ட 320 அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து இருந்தன. இந்த குடியிருப்பை இடித்துவிட்டு 240 குடியிருப்புகள் ஏற்கெனவே கட்டி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 வீடுகள் சாலை அகலப்படுத்தப்படுவதால் கட்ட முடியவில்லை. கேசவப்பிள்ளை பூங்கா பகுதியில் கட்டப்படும் வீடுகளில் 80 பேருக்கும் வீடுகள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

நிதிநிலை அறிக்கையில் 8 ஆண்டுகளில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய நிலையில், குடியிருப்புகள் வழங்கப்பட்டாலும் குடிசைகள் எண்ணிக்கை குறையவில்லையே?

கட்டி முடித்த வீடுகள், அங்கு குடியிருந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது, கூடுதலாக கட்டப்படும் வீடுகள் அருகில் உள்ள பகுதி
களில் குடிசைகளில் குடியிருப்போருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிசைகள் இருப்பதில்லை. குடியிருந்தவர்களுக்கே வீடுகள் அளிக்கப்படுகிறது.

பழைய கட்டிடங்களை இடித்து புதிதாகக் கட்டிக் கொடுக்க காலக்கெடு நிர்ணயித்துள்ளீர்களா? பழைய கட்டிடங்கள் இடிக்கப்
பட்டு 18 முதல் 24 மாதங்களில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.

இந்தப் பகுதிகள் அனைத்தும் மழைநீர் அதிக அளவில் தேங்கும் பகுதிகளாக இருப்பதால், இதில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

தற்போது இந்த திட்டப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் 7 முதல் 8 அடி உயரம் வரை தரைப்பகுதி உயர்த்தப்
பட்டுத்தான் கட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x