Published : 22 Aug 2019 07:22 AM
Last Updated : 22 Aug 2019 07:22 AM

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி: இடைத்தேர்தல் களப்பணியில் அதிமுக தீவிரம்; ரூ.200 கோடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான களப்பணியை அதிமுக தொடங்கியிருக்கிறது. அக்கட்சியை எதிர்த்து பிரதான போட்டியாளராக திமுகவே களத்தில் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டி
யிட்டு எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றார்.

இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதிக்கு
விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.

மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, தேர்தல் களப்பணியை அதிமுக முடுக்கிவிட்டுள்ளது. அக்கட்சி சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப்
பட்டுவிட்டன. கிராமம், ஒன்றியம் வாரியாக தொகுதியின் அனைத்து பகுதிகளிலும், 35 பேருக்கு ஒரு அதிமுக பிரதிநிதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த 35 பேரும் எந்த கட்சியை சேர்ந்தவர்கள், எந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் வாக்கு யாருக்கு செல்லும் வாய்ப்புள்ளது என்பன போன்ற பல்வேறு புள்ளிவிவரங்களை சேகரிக்க அப்பிரதிநிதிகள் பணிக்கப்பட்டுள்ளனர். அதிமுக பிரதிநிதிகள் தற்போது வீடுவீடாக சென்று விவரங்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பூத் கமிட்டி கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிமராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை பணிகளையும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மற்றும் அதிமுக எம்எல்ஏ.க்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். இத் தொகுதி
யில் மட்டும் ரூ.200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்
பட்டுள்ளதாகவும், விரைவில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்றும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக முந்திக்கொண்டுள்ள நிலையில், அதற்கு பிரதான போட்டியாளராக வரவிருப்பது திமுகவா அல்லது
காங்கிரஸா என்பது முடிவாகவில்லை. ‘அதிமுகவுடன் நேரடியாக நாங்களே மோதுவோம்’ என்று திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. இத்தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பிரதான போட்டியாளர்களாக அதிமுகவும், திமுகவும் இருக்கக்கூடும்.

அதேநேரத்தில் 2016 தேர்தலில் இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங். போட்டியிட்டதால், இடைத்தேர்தலிலும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்பியிருக்கிறார்கள்.

`தேர்தல் அறிவிப்புக்குமுன் அமமுக கட்சியை பதிவு செய்து, நிரந்தர சின்னம் கிடைத்தால் மட்டுமே நாங்குநேரியில் போட்டியிடுவோம்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதால், நாங்குநேரி தொகுதியில் அமமுக போட்டியிடும் வாய்ப்பில்லை என்றே கருதலாம்.

நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பிரதான கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கும் என்பதால், இடைத்தேர்தல் களம் தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x