Published : 22 Aug 2019 06:45 AM
Last Updated : 22 Aug 2019 06:45 AM

20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள் எம்.பி. - நெருக்கடியில் சிக்கியுள்ள ப.சிதம்பரம்

எம்.சரவணன்

சென்னை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் அவர் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.

20 ஆண்டுகள் மத்திய அமைச்சர், 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர், 9 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் என்று இந்திய அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்ற ப.சிதம்பரம், 1945-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தில் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பழனியப்பன், தாயார் லட்சுமி ஆச்சி. இவரது தாய்வழி தாத்தா செட்டிநாட்டு அரசர் அண்ணாமலை செட்டியார். இந்தியன் வங்கி நிறுவனர்களில் ஒருவரான ராமசாமி செட்டியார், சிதம்பரத்தின் சித்தப்பா. தந்தை பழனியப்பன் ஜவுளி வணிகம் செய்தவர்.

சிதம்பரம் இளம்வயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சிதம்பரம், மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி, சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டங்களைப் பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கிய அவர், புகழ்பெற்ற வழக்கறிஞர் பி.எஸ்.கைலாசத்திடம் பயிற்சி வழக்கறிஞராக சேர்ந்தார். கைலாசத்தின் மகள் நளினியை காதலித்து 1968-ல் திருமணம் செய்துகொண்டார்.

இளம் வயதியேலேயே காங்கிரஸில் இணைந்து செயல்பட்டாலும் அவரது காதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர் பெரியார். 1968-ல் பரபரப்பாக பேசப்பட்ட சிதம்பரம் - நளினி காதல் திருமணத்தை ‘வழிகாட்டித் திருமணம்' என்று பெரியார்
புகழ்ந்துரைத்தார். 1967-ல் ‘சுதேசமித்திரன்' நாளிதழில் உதவி ஆசிரியராகவும் சிதம்பரம் பணியாற்றியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் (1972), இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் (1973-76), தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (1976-77), காங்கிரஸ் அகில இந்திய இணைச் செயலாளர் (1985) என காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகவும், காரிய கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறார்.

1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009 என 7 முறை சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 மக்களவைத் தேர்தலில் தமாகா - விசிக - புதிய தமிழகம் கூட்டணியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனிடம் தோல்வி அடைந்தார். தேர்தல் அரசியலில் சிதம்பரத்தின் முதல் தோல்வி இது. 2014 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், அவர் போட்டியிடவில்லை. அதைத் தொடர்ந்து 2016 ஜூலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984-ல் முதல்முறையாக எம்.பி.யான அவர், 1985-ல் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். 1986 முதல் 1989 வரை மத்திய இணை அமைச்சராக இருந்த அவர், பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தம், உள்துறை போன்ற பல்வேறு துறைகளை கவனித்தார். 1991 முதல் 1996 வரை நரசிம்ம ராவ் அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சராக (தனிப்பொறுப்பு) இருந்தார்.

1996-ல் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்த ஜி.கே.மூப்பனார், தமாகா என்ற தனிக் கட்சியை தொடங்கினார். இதற்கு சிதம்பரம் முக்கிய காரணமாகவும், உறுதுணையாகவும் இருந்தார். 1996-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்த தமாகா, 20 எம்.பி.க்களைப் பெற்றது. தேவகவுடா தலைமையிலான அமைச்சரவையிலும், ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையிலும் மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பணியாற்றினார்.

1999-ல் அதிமுக – தமாகா கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது திமுக கூட்டணியில் பாஜகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2004-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்த சிதம்பரம், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி, உள்துறை போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்தார். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

பாஜக ஆட்சி அமைந்ததும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக அந்நிய முதலீடு பெற நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்தான் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது.

பன்முகத்தன்மை

ப.சிதம்பரத்தின் ஒரே மகன் கார்த்தி சிதம்பரம், தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 2018-ல் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

வழக்கறிஞர், பொருளாதார அறிஞர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட
ப.சிதம்பரத்தின் அறிவாற்றல் எதிர்க்கட்சியினரும் வியக்கும் ஒன்று. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி, இவரை கடுமையாக விமர்சித்திருந்தாலும், பாராட்டவும் செய்துள்ளார்.

தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்ற சிதம்பரத்துக்கு இலக்கியத்தில் பெரும் ஆர்வம் உண்டு. 2014-ல் ‘எழுத்து' என்ற இலக்கிய அமைப்பை தொடங்கியவர், இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களின் படைப்புகள் வெளிவர உதவி வருகிறார். பல்வேறு பத்திரிகைகளில் இவர் எழுதிய அரசியல், பொருளாதார, சமூக கட்டுரைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அம்மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது குஜராத் கலவர வழக்கு, போலி என்கவுன்ட்டர் வழக்கு ஆகியவற்றில் சிபிஐ தனது பிடியை இறுக்கியது. அமித்ஷா கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியை இழந்தார். குஜராத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அன்று ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சர். சிபிஐ பிடியில் அமித்ஷா இருந்தார். இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர். சிபிஐ பிடியில் ப.சிதம்பரம் சிக்கியுள்ளார்.

பலமுறை பிரதமர் பதவிக்கு பேசப்பட்டவர் ப.சிதம்பரம். ஆனால், அது கைகூடவில்லை. தற்போது 2-வது முறையாக தனிப்பெரும்
பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதால் சிதம்பரம் மீதான வழக்குகள் வேகம் பெற்று அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்
படுத்தியுள்ளன. இது அவருக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x