Published : 21 Aug 2019 08:29 PM
Last Updated : 21 Aug 2019 08:29 PM

பிக்பாஸ் புகார்; போலீஸாரின் அழைப்புக்கு காத்திருக்கிறேன்: மதுமிதா 

பிக்பாஸ் நிறுவனம் அளித்த புகாரில் போலீஸார் தன்னை அழைக்கவில்லை, அழைப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் என நடிகை மதுமிதா தெரிவித்தார்.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இடையில் வெளியேறிய நடிகை மதுமிதா, தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவதாக பிக் பாஸ் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் நடிகை மதுமிதாவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களிலேயே ஆடை குறித்து விமர்சனம் செய்ததால், வனிதா, ஷெரின், சாக்‌ஷி, அபிராமி, ரேஷ்மா உள்ளிட்டோரால் தனிமைப்படுத்தப்பட்டார் மதுமிதா.

மக்கள் ஆதரவு கிடைத்ததால், அவர் ஒவ்வொரு முறையும் எவிக்‌ஷன் ப்ராசசில் இருந்து தப்பித்தார். குழு உறுப்பினர்களிடம் பழகுவதிலும், உதவி செய்வதிலும் அவர் காட்டிய ஆர்வம் காரணமாக, நிகழ்ச்சியின் இறுதிவரை செல்லும் போட்டியாளராக இருப்பார் என பாராட்டப்பட்டார்.

ஆனால், பாராட்டப்பட்ட அந்த வாரமே ஆண் போட்டியாளர்களிடம் மோதலில் ஈடுபட்டார். ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு ஆதரவாக கஸ்தூரியும் சேரனும் பேச, மதுமிதா தனது வார்த்தையில் உறுதியாக நின்றதால் தனிமைப்படுத்தப்பட்டார்.

எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மதுமிதா, தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், திடீர் திருப்பமாக பிக் பாஸ் நிர்வாகம் மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது.

பிக் பாஸ் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஸ்வரி (எ) மதுமிதா, தன்னைக் காயப்படுத்திக் கொண்ட காரணத்தால் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த 18 -ம் தேதி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவர் செல்லும்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றிருந்ததாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கான பணத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம், ‘பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன்’ என்றும், ‘நீங்கள் தரும்வரை என்னால் காத்திருக்க முடியாது. என்னை ஏமாற்றி விட்டீர்கள்’ என மிரட்டுகிறார்” என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் பரவியது.

சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மதுமிதாவின் கருத்தை அறிய இந்து தமிழ் ஆன்லைன் சார்பில் அவரிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

போலீஸில் உங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறதே?

இந்த விவகாரம் குறித்து எனக்கு சட்டப்பூர்வமாக போன் கால் எதுவும் வரவில்லை. அதனால் அதுகுறித்து நான் எதுவும் சொல்லமுடியாது, தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.

நீங்கள் மிரட்டுவதாக பிக்பாஸ் நிர்வாகம் புகார் அளித்து, சி.எஸ்.ஆர் கொடுத்துள்ளதாக தகவல் வருகிறதே?

அப்படி புகார் கொடுத்திருந்தால் எனக்கு ஸ்டேஷனிலிருந்து அழைப்பு வந்திருக்கும் அல்லவா? அப்படி அழைத்தால் அதன் பின்னர் எனது பதிலை சொல்கிறேன்.

புகாரில் உள்ளபடி வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்து ஆடியோ மெசேஜ் அனுப்பினீர்களா?

எனக்கு சட்டப்பூர்வமாக போலீஸிடமிருந்து அழைப்பு வந்தபிறகு அதற்கான விடையை நான் சொல்கிறேன், அப்போது உங்களுக்கு புரியும்.

இவ்வாறு மதுமிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x