Published : 21 Aug 2019 05:32 PM
Last Updated : 21 Aug 2019 05:32 PM

ப.சிதம்பரம் மிகப்பெரிய வழக்கறிஞர்; குற்றச்சாட்டை சமாளிக்க தெரிந்தவர்: துரைமுருகன் கருத்து

மதுரை,

ப.சிதம்பரம் மிகப்பெரிய வழக்கறிஞர். தன் மீதான குற்றச்சாட்டை சமாளிக்கத் தெரிந்தவர் என திமுக பொருளார் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்குக்குழு ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து குறைபாடுகள் பற்றி கேள்விகள் கேட்டோம்.

இக்கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டதை வெளியில் செல்லக்கூடாது. இது ரகசியமான ஒன்று. சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்பு தெரிவிக்கக்கூடாது என்பதால் வெளியில் சொல்லக்கூடாது.

மதுரையில் மாணவர் விடுதி இடிந்து போயிருந்ததை பார்த்தோம். இங்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் மீண்டும் நிகழாவண்ணம் அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறோம்.

இந்தக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு யாரும் தவறான செய்திகள் சொல்லவில்லை. சில அதிகாரிகளுக்கு அந்தப்பணியை உடனே செவ்வனே செய்ய வேண்டும் என எச்சரித்திருக்கிறோம்.

ப.சிதம்பரம் மிகப்பெரிய வழக்கறிஞர், எனவே அவர் மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு எப்படி பதிலளிப்பது, சமாளிப்பது என்பது அவருக்கு தெரியும். பல குற்றவாளிகளுக்கு வாதாடிய அனுபவம் அவருக்குண்டு.

நாகப்பட்டினம் எம்பி தாக்கப்பட்டதை பத்திரிகைகள் வாயிலாக தெரிந்துகொண்டேன். அவர் குறைந்தபட்சம் போலீஸ் பாதுகாப்பாவது கேட்கலாம் என நினைக்கிறேன்.

நான் பலமுறை எம்எல்ஏவாக இருந்தவன். முன்பெல்லாம் அரசு விழாக்களில் பங்கெடுக்குமாறு எம்எல்ஏக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுப்பார்கள். தற்போது அந்த நடைமுறையின்றி அரசு விழாக்களுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் பிஆர்ஒ மூலம் போனில் தகவல் தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பல பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. தொகுதிக்குட்பட்ட எம்எல்ஏ, எம்.பி.க்களே உள்ளாட்சி பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி அமைப்பில் உள்ள குழுவில் எம்எல்ஏ, எம்பிக்களை உறுப்பினராக்க வேண்டும் என கமிட்டி சார்பில் அறிவுறுத்தவுள்ளோம். இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சரை சந்தித்து கருத்து தெரிவிக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-எஸ்.ஸ்ரீநிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x