

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவுகளை கையாளும் முறையினை மேம்படுத்துவது, மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு பரவாமல் தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணையர் பிரகாஷ், தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் பணிபுரியும் மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோருடன் திடக்கழிவுகளை கையாளும் முறையினை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணையர் பிரகாஷ், தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டலங்களிலும் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என வகைப்பிரித்து சேகரிப்பது குறித்தும், மக்கும் குப்பைகளை உரமாக்கும் மையங்கள் குறித்தும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் நிலையங்களைக் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, உரம் தயாரிக்கும் மையங்கள், தரம் பிரிக்கும் நிலையங்களின் முழு திறன் கொள்ளளவிற்கு குப்பைகளை கையாள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தினார்.
மேலும், குடியிருப்புகளில் உருவாகும் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகைப்பிரித்து சேகரிக்கும் முறையினை முழுமையாக அனைத்து குடியிருப்புகளிலும் நடைமுறைப்படுத்தவும், அனைத்து பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளிலும் தீவிர துப்புரவு பணியினை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
பருவமழை காலம் தொடங்கவுள்ள நிலையில், டெங்கு பரவுவதை தடுப்பதற்கு அனைத்து மண்டல அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வீடுகள்தோறும் டெங்கு நோயை பரப்பும் கொசு முட்டைகள் உள்ளனவா என கண்டறிந்து, அவற்றை அழிப்பதற்கு மலேரியா தொழிலாளர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலிமனைகளை கண்டறிந்து அவ்விடங்களில் குப்பைகள் சேராமலும், மழைநீர் தேக்கம் ஏற்பட்டு கொசு உற்பத்தி ஆகாதவாறு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, வட்டார துணை
ஆணையர்கள் எஸ்.திவ்யதர்ஷினி, பி.என்.ஸ்ரீதர், ஆல்பி ஜான் வர்கீஷ், தலைமைப் பொறியாளர் என்.மகேசன், மாநகர நல அலுவலர், மேற்பார்வை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”. இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.