

சென்னை
சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி. ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை என, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஆக.21) வெளியிட்ட அறிக்கையில்,
"சிதம்பரம் இன்று தேடப்படுகிறார். எதற்காகத் தேடப்படுகிறார் என்றால், அவர் செய்த ஊழல் குற்றச்சாட்டுக்கு , செய்த தவறுக்காகத் தேடப்படுகிறார். இன்று நடந்துகொண்டிருக்கின்ற நிகழ்வுகள், பொதுவாழ்க்கையில் தூய்மை தேவை என்பதை வலியுறுத்துகிறது.
பொதுவாழ்க்கையில் தூய்மை இல்லையென்றால், தலைமுறைக்கேத் தலைவராக இருந்தாலும், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது சிதம்பரத்தின் ஊழல் போக்கு.
சிதம்பரம் இரண்டு வகையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார். ஒன்று பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால், இப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரிடும். இரண்டாவது சட்டம் தன் கடமையைச் செய்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். தனக்கு ஒரு சம்மன் வந்திருக்கிறது என்றால், அதை ஏற்று விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.
பிரபலமானவர்கள், சாமானியர்கள் இரண்டு பேருக்கும் சட்டம் சமம்தான். ஒரு முன்னாள் நிதியமைச்சர், சட்டம் பயின்றவர், உச்ச நீதிமன்றத்தின் பிரபலமான வழக்கறிஞர். ஆனால் சிபிஐ சம்மன் அனுப்பியும் நியாயமான முறையில், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர் ஒத்துழைக்க மறுப்பது ஏன்? நேற்று ஆறு மணி வரை வெளியில் இருந்த ப.சிதம்பரம் இரவு முழுவதும் வீட்டுக்கு வராமல் அவரை தடுப்பது எது?
மடியில் கணமில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே? இப்போது அவர் நடந்துகொள்வது, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை இந்த நாட்டுக்கு உணர்த்துகிறார்.
தானும் உணர்ந்து இருக்கிறார். இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்த இடைத்தரகர் ஒருவர் அப்ரூவராக மாறி இருக்கின்ற காலக்கட்டத்தில் அவர் வகித்துக் கொண்டிருந்த மக்களால் கொடுக்கப்பட்ட நிதி அமைச்சர் பதவியை தன் சொந்த குடும்பம் பலன் பெற வேண்டும் என்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.
தன்னுடைய சட்ட அறிவை தான் செய்த தவறுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தி பல முறை வாய்தா வாங்கி கைதில் இருந்து தப்பித்து இருக்கிறார். ஆனால், நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீனை மறுத்தது மட்டுமல்லாமல், இத்தகைய பொருளாதார குற்றாச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், விசாரணையில் இருந்து ஒதுங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என ஜாமீனை மறுத்துள்ளது.
சிதம்பரம் தலைமறைவாகி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதிலிருந்து ஜாமீன் விலக்கு கிடைக்கும், உடனே வெளியே வந்துவிடலாம் என சட்டம் தெரிந்தவர் சட்டத்திற்குப் புறம்பாக திட்டமிட்டிருக்கிறார்.
வழக்குகளை பற்றி தெரிந்தவர், நியாயமாக கடைபிடிக்க வேண்டிய வழக்கத்தை மீறியிருக்கிறார். ஆனால், சட்டம் தன் கடமையை உறுதியாக செய்துகொண்டிருக்கிறது. இதைத் தெரிந்தும் காங்கிரஸை சேர்ந்தவர்கள் குறிப்பாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசியதால் வந்த நடவடிக்கை என்கிறார்.
மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால், நேற்று மாலை வரை டெல்லியில் தான் இருந்திருக்கிறார். அப்போதே கைது செய்திருக்கலாம். இன்னொன்று மத்திய அரசின் உளவுத்துறைக்கு சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருக்காது. சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்றால் அங்கேயே கைது செய்திருக்கலாம். சட்ட ரீதியாக ஒரு வீட்டில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
சிபிஐ அதிகாரிகள் வீட்டுக்கு சென்றது சரியா என்று கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினர், டெல்லியில் இருந்து வீட்டுக்கு வராமல் இருப்பது சரியா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, அவரது ஜாமீன் மனுவை மறுத்திருக்கிறார். ஆகவே உயர் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சிந்திக்க வைக்கிறது என்றுதான் அர்த்தம்.
சிதம்பரம் அமைச்சராக இருந்த பொழுது எதிர்க்கட்சியினரை கைது செய்ததற்கான பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒரு தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சில ஊழல்வாதிகள். குற்றம்சாட்டப்பட்ட போது அமித்ஷாவும் மோடியும் விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்தார்கள். நீதிமன்றத்தை சரியான முறையில் அணுகினார்கள். வெற்றியும் பெற்றார்கள். இது வரலாறு.அதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
ஆக, ஓடி ஒளிந்துகொண்டு தவறை மறைத்துவிட்டு அரசியல் காரணங்களை சொல்வது எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் என்றாலே ஊழல். அந்த ஊழல்வாதிகள் சூழலுக்கும், ஊழலுக்கும் ஏற்றாற்போல் பிரியங்கா காந்தி வேறு ஆதரவாக ட்வீட் செய்கிறார் என்றால் இதைவிட தலைகுனிவு கிடையாது.
தூய்மையான ஒரு ஆட்சி நடக்கிறது. இதற்கு முந்தைய ஆட்சியில் காங்கிரஸும் திமுகவும் தன்னாட்சி அதிகாரத்தை எவ்வளவு தவறாக சுயலாபத்திற்காக பயன்படுத்தினார்கள் என்பதை இந்த வழக்கின் மூலம் இந்திய மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்வார்கள்.
சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி. ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை", இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.