காங்கிரஸ், திமுகவினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  

காங்கிரஸ், திமுகவினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  
Updated on
2 min read

விருதுநகர்

காங்கிரஸ், திமுகவினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு 1,200 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், "தேசிய வங்கியில் உள்ள பணத்தை எல்லாம் கொள்ளை அடித்தவர்களைப் பார்த்து மோடி சும்மா இருக்கமாட்டார். ப.சிதம்பரம் நியாயமானவர் என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். மறைந்த புரட்சித்தலைவி அம்மாவின் மீது வழக்குப்போட்டு சட்டம் பேசியவர்தானே இவர். இப்போது ஏன் பயப்படுகிறார். நீதிமன்றத்தில் அவரின் நியாயத்தை நிரூபிக்கலாமே?

காங்கிரஸும் திமுகவும் பிறர் சொத்துக்களை தன் சொத்துக்களாக நினைக்கும் கட்சிகள். சட்டம் தன் கடமையை செய்து வருகின்றது. அதில் ப.சிதம்பரம் என்றால் என்ன? பாமர மக்கள் என்றால் என்ன? அனைவரும் ஒன்றுதான்.

ஆவின் பால் விவகாரத்தில் குறித்த பேச்சில் எனக்கும் முதல்வருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. முதல்வர் பேசிய கருத்தும் சரி, நான் சொன்ன கருத்தும் சரி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி" என்றார்.

லஞ்சம், ஊழலை மறைக்கவே அதிமுக மாவட்டங்களை பிரிப்பதாக ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து கேட்டபோது, "ஸ்டாலின் தன்னை ஒருமுறை திரும்பிப்பார்க்க வேண்டும். திருக்குவளையில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தேன் என கலைஞர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். கலைஞரால் அப்போது 4 ரூபாய் கொடுத்து ரயிலில் வரமுடியவில்லை.

தற்போது அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது. ஸ்டாலின் அவரது சொத்து குறித்து விளக்கம் தெரிவித்தபின் எங்கள் மீது புழுதிவாரி தூற்றட்டும்.

தினகரன் காட்சியிலேயே இல்லாதவர், வடிவேல் போல் நானும் ரவுடி தான், நானும் ரவுடிதான் என்று சொல்லிக் கொண்டு வருகிறார். மக்கள் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் ஒரு குழு மட்டுமே உள்ளது. அந்த குழுவும் கலைந்து விட்டது என்றால் அவருக்கு வேலை முடிந்துவிட்டது. பாண்டிச்சேரி பண்ணையில் பத்திரமாக தினகரன் உள்ளார்" என்றார்.

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து குறித்து கேட்டபோது, " எங்களோடு கூட்டணி வைக்கும் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரமுடியும். எங்களோடு சேர்ந்தவர்கள்தான் பலமாகவும், வளமாகவும் இருக்க முடியும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்ன பேசுகிறாரோ அதைதான் ஸ்டாலின் பேசுகிறார். இம்ரான் நமது பிரதமர் மோடியைப் பார்த்து எச்சரிக்கை விடுத்து பேசுகிறார். இந்தியாவின் 125 கோடி மக்களின் தலைவர் பிரதமரை பார்த்து சுண்டக்காய் பாகிஸ்தான் பிரதமர் மிரட்டும் விதத்தில் பேசுகிறார், அதை கைதட்டி ஆரவாரம் செய்கின்ற உளவாளி கூட்டம் திமுக, காங்கிரஸ் கூட்டம். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். எந்த கட்சி போராடினாலும் அந்த கட்சி தடை செய்யப்பட வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in