Published : 21 Aug 2019 12:57 PM
Last Updated : 21 Aug 2019 12:57 PM

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதில் பயனில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை

தனிமனித தாக்குதலை ஆரம்பித்து வைத்ததே ஸ்டாலின் தான். அவருடைய அப்பா கூட அப்படியில்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதே?

இது நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை. நீதிமன்றம் கடுமையாக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது. எல்லா வகையிலும் இதற்கு மூளையாக ப.சிதம்பரம் செயல்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிபிஐ நடவடிக்கையை எடுத்து வருகிறது. எந்த வழக்காக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டும். ஓடி ஒளிவதால் பயன் இல்லை. அதனை எதிர்கொள்வதுதான் நல்ல விஷயம். ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.

,முதல்வர் பழனிசாமி ப.சிதம்பரத்தை விமர்சித்திருந்தார். இதில், அரசியல் தலையீடு உள்ளதா?

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக அதற்கும் இதற்கும் சம்மந்தப்படுத்தக் கூடாது. முதல்வர் அரசியல் ரீதியாக கருத்து கூறினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன், அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம், எல்லோரையும் சிறையில் தள்ளுகிறோம் என, ப.சிதம்பரம் கூறினார். நாங்கள் கோபப்படவில்லை. மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் வரும். யாருக்கும் பயம் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற நிலையில் ப.,சிதம்பரம் இப்படி கருத்துக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று தான் நாங்கள் அன்றைக்கு கூறினோம். ஆனால், அப்படி சொன்னவருக்கே இப்படியொரு நிலைமை வந்தது பரிதாபத்துக்குரியது. அவர் குற்றம் இழைத்தாரா, இல்லையா என்பது குறித்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தலைமறைவாவது, அவ்வளவு பெரிய பொறுப்புக்கு அழகல்ல.

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளதே?

மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விவசாயம், கால்நடை, தொழில்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக முதல்வர் சுற்றுப்பயணம் செல்கிறார் என்பது நல்ல விஷயம். அதற்கு திறந்த மனதுடன் வாழ்த்து சொல்வதுதான் நல்ல பண்பாடு. அதற்கு வாழ்த்து சொல்லாம்ல் திமுக இப்படி சொல்வது, அதன் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. திமுக பரந்த மனப்பான்மை உடைய கட்சி அல்ல. நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் கனவு கண்டார். இலவு காத்த கிளி போல காத்துக்கொண்டிருந்தார். ஆனால், இரண்டும் நடக்கவில்லை. விரக்தியின் உச்சத்தில் இப்படிப் பேசுகிறார். காமலைக்காரர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் ஸ்டாலின் பேசுகிறார்

துண்டு சீட்டு இல்லாமல் பேசமுடியாது என, ஸ்டாலினை தமிழிசை விமர்சித்துள்ளாரே? இது தனிமனித தாக்குதல் இல்லையா?

தனிமனித தாக்குதலை ஆரம்பித்து வைத்ததே ஸ்டாலின் தான். அவருடைய அப்பா கூட அந்த மாதிரி கிடையாது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x