போதிய வசதிகளற்ற உள் விளையாட்டு அரங்கம்; மந்தகதியில் வெளி விளையாட்டரங்க பணி: காரைக்கால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை

போதிய வசதிகளற்ற உள் விளையாட்டு அரங்கம்; மந்தகதியில் வெளி விளையாட்டரங்க பணி: காரைக்கால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை
Updated on
1 min read

வீ.தமிழன்பன்

காரைக்கால்

காரைக்காலில் வெளி விளையாட் டரங்கம் அமைக்கும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக மாணவர்கள், விளை யாட்டு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காரைக்காலில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண் டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கையின் அடிப்படையில் புறவழிச்சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான மைதானத்தில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணி பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. ரூ.13.22 கோடியில் கட்டப்பட்ட உள்விளையாட் டரங்கத்தை 2016 ஜன.30-ம் தேதி அப்போதைய புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது உள் விளையாட்டரங்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மைதா னத்தில் ரூ.8.89 கோடியில் பல்வேறு விளையாட்டுகளுக்கு ஏற்ற வகையில் திறந்தவெளி விளை யாட்டு மைதானம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டி, மிக விரைவாக வெளி விளையாட்டரங்க பணிகள் முடிக் கப்பட்டுவிடும் என தெரிவித்தார். இதனால், மாணவர்களும், விளை யாட்டு ஆர்வலர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால், அடிக்கல் நாட்டப் பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிதிப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் வெளி விளையாட் டரங்க பணிகள் இன்னும் முடிவடை யவில்லை.

ஓட்டப்பந்தயத்துக்கான டிராக் உட்பட பல்வேறு விளையாட்டுக ளுக்கான களங்களுடன் இந்த வெளிவிளையாட்டரங்கம் அமைக்கும் பணி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், விளையாட்டு மைதானத்தில் 1,500 பேர் அமரும் வகையில் 2 கேலரிகள் அமைக்கும் பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை.

இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியது: வெளி விளையாட்டரங்க பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால், இப்பகுதியில் இருந்து காவல்துறை, ராணுவம் உள்ளிட்டப் பணிகளில் சேரும் ஆர்வம் உடையோருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் அதிகமானோர் விளையாட்டில் ஆர்வமுடையோராகவும், தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் திறமையும், தகுதியும் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் முறையான பயிற்சி பெறுவதற்கான களம் சரியாக இல்லை. எனவே, வெளி விளையாட்டரங்க பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) ஜி.பக்கிரிசாமி கூறும்போது, ‘‘ஹட்கோ நிதியுதவியில் வெளி விளையாட்டரங்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிதி பயன்பாடு தொடர்பாக சில ஒப்புதல்கள் பெறவேண்டியுள்ளது. இன்னும் 10 நாட்களில் அதற்கான ஒப்புதல் கிடைத்துவிடும். அதன் பின்னர் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, இயற்கை சீற்றம் போன்ற எவ்வித இடை யூறும் இல்லாவிட்டால் 3 மாத காலத்துக்குள் பணிகள் முடிக்கப் பட்டுவிடும்’’ என்றார்.

வெளி விளையாட்டு அரங்கப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், உள் விளையாட்டரங்கத்திலும் முழுமையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in