Published : 21 Aug 2019 08:30 AM
Last Updated : 21 Aug 2019 08:30 AM

ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியீடு: 1.62 லட்சம் பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி

சென்னை

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. 1.62 லட்சம் ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் 482 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு ஜூன் 8-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-ம் தாள் தேர்வு ஜூன் 9-ம் தேதியும் நடத்தப்பட்டது.

இதில் ‘டெட்’ முதல் தாள் தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். தொடர்ந்து, ஜூலை 9-ம் தேதி முதல் தாளுக்கான உத்தேச விடைகளை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை ஜூலை 15-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது.

அதன்படி பெறப்பட்ட கருத்துகளை, நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்த தேர்வு வாரியம், இறுதி விடைகள் பட்டியலைத் தயாரித்தது.

அதன்பின் அந்த விடைகளைக் கொண்டு ‘டெட்’ முதல் தாளுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. தொடர்ந்து, மதிப்பெண்களை கொண்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘தற்போது ‘டெட்’ முதல் தாளில் அனைத்து தேர்வர்களும் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தனித்தனியாக தேர்வர்களுக்கான மதிப்பெண் அட்டை ஆக. 22-ம் தேதி (நாளை) வெளியிடப்படும்’ என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x