

சென்னை,
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிடும்படி தலைமை நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு பரிந்துரைத்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, சங்கங்களின் பதிவாளர் பிறபித்த உத்தரவுக்குத் தடை விதித்து நடிகர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார்.
அதே சமயம், தேர்தலுக்கு எதிராக உறுப்பினர்கள் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பதிவாளர் உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கங்களின் பதிவாளரின் பதில் மனுவுக்குப் பதிலளித்து விஷால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “பதவிக்காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் சங்க நடவடிக்கைகளைக் கவனிக்கலாம் என்றும், அதற்கு தடை எதுவும் இல்லை என்றும், தேர்தலை நிறுத்தி வைக்க சங்கப் பதிவாளருக்கு அதிகாரம் இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், உரிமையியல் வழக்கில் நீதிபதி சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவின் நகலும் தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஆய்வு செய்த நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக ரிட் வழக்கும், உரிமையியல் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவதைத் தவிர்க்க, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்தும் வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட, தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தார்.