Published : 20 Aug 2019 06:12 PM
Last Updated : 20 Aug 2019 06:12 PM

கிறிஸ்தவ மிஷனரிகள் குறித்து கருத்து: தீர்ப்பு வரிகளை நீக்கினார் நீதிபதி

கிறிஸ்தவ மிஷனரிகள், கல்வி நிறுவனங்கள் குறித்த தனது கருத்தை நீக்கி திரும்பப் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் விலங்கியல் துறை மாணவ- மாணவிகள் பெங்களூருவுக்குச் சுற்றுலா சென்றபோது உதவிப் பேராசிரியர்கள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார்.

அது குறித்து அளிக்கப்பட்ட தீர்ப்பின் 32-வது பத்தியில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவது குறித்தும், இருபாலர் கல்வி வழங்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பெற்றோர் கருதுவதாகவும் நீதிபதி தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

நீதிபதியின் இந்தக் கருத்து குறித்து பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், வழக்கின் எல்லையை மீறி இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கில் தொடர்பில்லாத சர்ச்சைக்குரிய கருத்துகளால் நீதிமன்றத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும், கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராகவும், வழக்கிற்கு தொடர்பில்லாமலும் கருத்துகள் இருப்பதாக மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி சார்பில் வழக்கறிஞர் ஜான் சக்காரியா என்பவர் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் முறையீடு செய்தார்.

அதனையேற்ற நீதிபதி தனது தீர்ப்பில் கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்துப் பதிவு செய்த 32-வது பத்தியை நீக்குவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனால் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x