

சென்னை
இட ஒதுக்கீடு குறித்து மறு விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அறிவித்துள்ளதற்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “ஒடுக்கப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்ட ரீதியாக அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு குறித்து மறு விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக சமுதாயத்தின் அடிமைச் சேற்றில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களை விடுவிக்கவும், கைதூக்கி மேலே கொண்டு வருவதற்காகவும் அரசியல் சட்ட ரீதியாக இட ஒதுக்கீட்டு முறையினை அறிஞர் அம்பேத்கர் கொண்டு வந்து அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்தார்.
காஷ்மீருக்கு அரசியல் சட்ட ரீதியாக அளிக்கப்பட்ட சிறப்பு உரிமையை அண்மையில் இந்திய அரசு பறித்தது. அதைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சியின் தொடக்கம்தான் மோகன் பாகவத்தின் அறிக்கையாகும்.
இதற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்’’ என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.