Published : 20 Aug 2019 03:01 PM
Last Updated : 20 Aug 2019 03:01 PM

மதுரை மாவட்டத்தைப் பிரிக்க வேண்டிய சூழ்நிலை எழவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் உதயகுமார் 

திருமங்கலம்,

மதுரை மாவட்டத்தைப் பிரிக்க வேண்டிய சூழ்நிலை எழவில்லை. இதுதொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் காளிதாஸ், திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மதுரை மாவட்டம் பிரிக்கப்படும் என்று பல்வேறு வலைதளங்களில் செய்திகள் வந்துள்ளன. இது வீண் வதந்தி ஆகும்.

வேலூர் போன்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் ஒரு கிராமம் செல்ல வேண்டும் என்றால் நூறு கிலோ மீட்டருக்கு பயணித்துதான் செல்ல வேண்டும். ஆனால் மதுரை மாவட்டம் அப்படி இல்லை. எளிதில் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் செல்லலாம். ஆகையால் மதுரை மாவட்டத்தைப் பிரிக்கும் சூழ்நிலை எதுவும் இல்லை. ஆகவே இந்த வீண் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

அமைப்புசாரா நல வாரியத்தை முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து இதில் 17 நல வாரியங்கள் சேர்க்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நலவாரிய உறுப்பினர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சத்துக்கு உயர்த்தித் தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்".

இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

- எஸ்.ஸ்ரீநிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x