

சாத்தான்குளத்தில் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சிலிண்டர், கட்டிங் மெஷின் உள்ளிட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சரியான நேரத்தில் அலாரம் ஒலித்ததால் ரூ.80 கோடி மதிப்பிலான நகை, பணம் தப்பியது.
சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் அருகே இட்டமொழி சாலையில் வாடகை கட்டிடத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வங்கியின் அலாரம் ஒலித்தது. உடனே அருகில் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கிருந்து மூவர் ஓடியுள்ளனர். அவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் துரத்தினர். ஆனால் அவர்கள் மதில் ஏறி குதித்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி கனகராஜ், ஆய்வாளர் (பொ) ராபின்சன் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது வங்கி வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு சிலிண்டர், காஸ் வெல்டிங் கட்டர், கையுரை, இரு ஹெல்மெட் கிடந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வங்கி முன்புள்ள ஸ்பீக்கர், சிசிடிவி கேமரா, மின் வயர்கள், துண்டிக்கப்பட்டு பீஸ்கேரியர் கழற்றி வைக்கப்பட்டிருந்தது.
ஒருவர் சிக்கினார்
தப்பியோடிய கொள்ளையர் களை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பண்டாரபுரம் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. அங்கு சென்று தேடியதில் ஒரு கிணற்றில் பதுங்கி இருந்த இளை ஞரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் ராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி கன்னி ராஜ்புரத்தை சேர்ந்த ராமர் மகன் சிங்கராஜ் (26) எனவும், சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அவருடன் சொக்கலிங்கபுரம் கோழிப்பண்ணை உரிமையாளர் செந்தில் (27), சங்கரன்குடியிருப்பு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைப் பார்த்து வந்த சேலத்தை சேர்ந்த சங்கர் ஆகியோர் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது.
இவர்கள் கடந்த 2 நாட்களாக வங்கியில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். சனிக்கிழமை ரம்ஜான் விடுமுறை என்பதால் காலை 9 மணிக்கு வந்து சிசிடிவி கேமரா, மின்வயர்களை துண்டித்து சென்றுள்ளனர். பின்னர் இரவில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அலாரம் ஒலித்ததால் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.
செந்தில் நடத்தி வரும் கோழிப் பண்ணையில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டு ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேத மடைந்தன. இவர் கோழிப்பண்ணை அமைக்க இதே வங்கியில்தான் கடன் பெற்றுள்ளார் எனபோலீஸார் தெரிவித்தனர். சாத்தான்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிங்கராஜை கைது செய்தனர்.
தப்பியோடிய செந்தில் மற்றும் சங்கரை தேடி வருகின்றனர்.