சேலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா: முதல்வர் பழனிசாமி பேச்சு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆக.19) சேலத்தில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இத்திட்டம் இன்று (ஆக.20) சேலத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் பட்டா வழங்கப்படும். அதேபோல் பட்டா மாறுதலும் செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பல பேர் நீண்ட காலமாக வசித்து வந்த இடத்திற்கு வீட்டு மனைப் பட்டா இதுவரை வாங்காமல் இருந்திருப்பீர்கள். அந்த வீட்டு மனைப் பட்டா விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும், வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

வீட்டு மனைப் பட்டா இருந்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் வாயிலாக வீடு கட்டித் தரப்படும். பேரூராட்சிகளிலும் இதேபோல் நிறைவேற்றப்படும். பேரூராட்சிகளில் அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதுதான் எங்களின் லட்சியம். அப்போதுதான், தமிழகத்தில் குடிசைகளின்றி அடுக்குமாடி வீடுகளாக காட்சியளிக்கும்.

நீரை சேகரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என எண்ணி செயல்பட வேண்டும். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய இருக்கிறது. 1,200 ஏக்கரில் அதனை நடைமுறைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

இந்த கால்நடைப் பூங்கா வரும்போது, கால்நடை ஆராய்ச்சி மையமும் உருவாக்கப்படும். கால்நடை மருத்துவக் கல்லூரி ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. ஆராய்ச்சி மையத்தில், மீன் வளர்ப்பு, கலப்பின மாடுகள் உருவாக்கம், ஆடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். கோழிகள், ஆடுகள், மாடுகள் மக்களுக்கு வழங்கப்படும். கால்நடைப் பூங்கா அமைந்தால் இந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்",

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in