Published : 20 Aug 2019 11:23 AM
Last Updated : 20 Aug 2019 11:23 AM

பால் விலை உயர்வு; மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள்: ஸ்டாலின் விமர்சனம்

நெல்லை

துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு பேசுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுப்பிய விமர்சனத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு தினம் இன்று (ஆக.20) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளரகளிடம் பேசியதாவது:

"சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு நாள் இன்று. இந்த நாளில், அவரது உருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து என்னுடைய மரியாதையைச் செலுத்தியிருக்கிறேன். ஒண்டிவீரன், சுமார் 2,000 வீரர்களைக் கொண்டிருக்கக்கூடிய ஆங்கிலேய தளபதியை எதிர்த்துப் போராடி, வெற்றி கண்டவர். அவருக்குத் தான் கருணாநிதி ஆட்சியில் மணிமண்டபம் கட்டுவதற்கு உருவச்சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கு அமைந்திருக்கிறது.

அவர் எந்த உணர்வுடன் போராடினாரோ, அந்த உணர்வை கருணாநிதி உள்ளத்திலே பதிய வைத்துக்கொண்டு அருந்ததியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று, வெறும் அறிவிப்போடு இல்லாமல், சட்டப்பேரவையில் தீர்மானமாகக் கொண்டு வந்து சட்டமாக்கி, அதனை நிறைவேற்றினார். அந்தச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற அந்த நாளில், கருணாநிதி உடல் நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், அவருக்குப் பதிலாக துணை முதல்வராக இருந்த நான் அதனை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது எனக்குக் கிடைத்த பெருமை.

பால் விலை உயர்வு

2011-ல் எப்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததோ, இப்போது 3-வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பால் வார்ப்பார்கள். ஆனால், பால் விலை உயர்வினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைக்கேட்டால், கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் விலை உயர்வு உயர்த்தப்பட்டிருப்பதாக பெருமையாகச் சொல்கிறார்கள். கொள்முதல் செய்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தும் முயற்சி இது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அத்துறை லாபகரமாக இயங்குவதாக பெருமையாகச் சொல்கிறார். ஆனால், முதல்வர் பழனிசாமி, நஷ்டத்தில் இயங்குவதால் பால் விலையை உயர்த்துவதாகச் சொல்கிறார். எது உண்மை, எது பொய் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

மாவட்டங்கள் பிரிக்கப்படுவது அவர்கள் செய்திருக்கும் ஊழல், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது. நல்ல எண்ணத்துடன் செய்வதாக நான் கருதவில்லை''.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

காஷ்மீர் விவகாரத்திற்காக டெல்லியில் போராட்டம். திமுக தேசிய அரசியலை நோக்கி செல்கிறதா?

எந்தப் பிரச்சினையிலும் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்கள்.

துண்டுச் சீட்டு வைத்துக்கொண்டு படிப்பதாக தமிழிசையின் விமர்சனம் குறித்து?

அது அவர்களின் தரத்தைச் சொல்கிறது. நான் கவலைப்படவில்லை. எதையும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். பொத்தம்பொதுவாக தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோரைப் போல வாய்க்கு வந்ததைச் சொல்லக்கூடாது"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x