

சுப. ஜனநாயகச்செல்வம்
மதுரை
மதுரையில் நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தி வரும் இலவச மருத்துவமனையில் தினமும் 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
மதுரை நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம், கீழமாசி வீதி தாசில்தார் பள்ளிவாசல் அருகில் செயல்படுகிறது. இச்சங் கத்தில் 940 உறுப்பினர்கள் உள்ளனர்.
இச்சங்கக் கூட்டத்தில் மதுரை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இலவசக் கல்வி, மருத் துவம், கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக மாதந்தோறும் உறுப்பினர்கள் சிறு தொகையை சேமிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து முதலில் இலவச மருத்துவமனை தொடங்க முடிவெ டுத்தனர். இதற்காக வில்லாபுரம் தோரண நுழைவு வாயில் அருகே உள்ள வாடகைக் கட்டிடத்தில் 2014-ம் ஆண்டு முதல் மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். இங்கு ஓய்வு பெற்ற மருத்துவர் கோவிந்தராஜன் தலைமையில் 7 மருத்துவர்கள் தினமும் சிகிச்சை அளிக்கின்றனர். இங்கு 12 செவிலியர்கள் உட்பட 18 பேர் பணிபுரிகின்றனர்.
தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சேவை கிடைப்பதால் பலரும் சிகிச்சை பெற வருகின்றனர்.
இதுகுறித்து சங்கச் செயலாளர் கே.மோகன் கூறியதாவது:
வில்லாபுரத்தில் 1500 சதுர அடி பரப்பளவில் இம் மருத்துவமனையைத் தொடங்கினோம். இங்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் சர்க்கரை நோயாளிகள் உட்பட 450 -ல் இருந்து 550 பேர் வருகின்றனர். ரத்தப் பரிசோதனை, இசிஜி, ஸ்கேன், மருந்து, மாத்திரை, ஊசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சிலர் திரும்ப திரும்ப வந்து மருந்து, மாத்திரைகளை பெறுவதாக புகார் எழுந்ததால், கடந்த ஓராண்டாகத்தான் மருந்து, மாத்திரைக்கு மட்டும் ரூ. 50 கட்டணம் வசூலிக்கிறோம்.
மருத்துவமனையை நிர்வகிக்க மாதந்தோறும் ஏழரை லட்ச ரூபாய் செலவாகிறது. அதில் சங்கத்தில் உள்ள 940 உறுப்பினர்களின் மாதாந்திர நன்கொடை, மற்ற சோப், பிஸ்கட் நிறுவனத்தினரின் நன்கொடை சேர்த்து ஐந்தரை லட்ச ரூபாய் வசூலாகும்.
மீதமுள்ள தொகைக்கு ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இங்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவி மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க உள்ளோம்.
இம்மருத்துவமனையை 24 மணி நேரமாக்கவும், மேலும் 3 இடங் களில் இலவச மருத்துவமனை தொடங் கவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.