Published : 20 Aug 2019 09:58 AM
Last Updated : 20 Aug 2019 09:58 AM

பனி, கனமழை போன்ற இயற்கை சீற்றத்தால் வாழ்வாதாரம் இழந்த தேயிலை விவசாயிகள்: ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை 

ஆர்.டி.சிவசங்கர்

உதகை

இந்தாண்டு பனி, வறட்சி, வெள்ளம் ஆகிய காரணங்களால் பசுந்தேயிலை வரத்து இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் தேயிலை விவசாயிகள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் 45 ஆயிரம் ஏக்கரிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் 20 ஆயிரம் ஏக்கரிலும், டான்டீயில் 4311 ஹெக்டரிலும் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.

இதுதவிர பல விவசாயிகளின் வருவாய் நிலங்களிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் செக்சன் 17 நிலங்களிலும் தேயிலை பயிரிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீலகிரியில் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளதாக சிறு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் சாகுபடி செய்யப்படும் பசுந்தேயிலை, 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள், 15 கூட்டுறவு தேயிலை தொழிற் சாலைகளுக்கு விநியோகிக்கப் பட்டு, தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் சுமார் 60 ஆயிரம் சிறு,குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்திக்கான மூலப்பொருளான பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்கக் கோரி விவசாயிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நலிவடைந்த விவசாயிகள் பலர் தங்களது தோட்டங்களை விற்றுவிட்டு, பிழைப்பு தேடி பிற மாவட்டங் களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பல தோட்டங்கள் கட்டிடக் காடுகளாக மாறி சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக உருவாகியுள்ளது.

கடும் நெருக்கடியில் இருந்த தேயிலை விவசாயிகளை இந்தாண்டு காலநிலை மாற்றங் களும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது என்கிறார் நெலிகொலு சிறு மற்றும் குழு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் ஹெச்.என்.சிவன்.

அவர் கூறும்போது, ‘‘அண்மை யில் பெய்த கனமழையால் மாவட்டத்தில் 3000 மி.மீட்டருக்கு அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது. கேத்தி பாலாடா, முத்தொரை பாலாடா, உதகை, நடுவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை, இஞ்சி, ஏலம், குறுமிளகுப் பயிர்கள் நாசமாயின. மழையால் சூரிய ஒளி இல் லாமல், பனி மூட்டத்தால் தேயிலை வரத்து குறைந்ததுடன், சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலுக்கும் தேயிலைச் செடிகள் உள்ளாகி யுள்ளன. இந்தாண்டு 8 மாதங்கள் பனி, வறட்சி மற்றும் மழையால் தேயிலை விவசாயிகள் வாழ்வா தாரத்தை இழந்துள்ளனர்’’ என்றார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தை இயற்கை மாவட்ட மாக மாற்ற தகுந்த தருணம் இதுதான் என்கிறார் சிறு, குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன்.அவர் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பல தேயிலைத் தோட்டங்களில் மண் சரிவு ஏற்பட்டு, வளமான மேல் மண் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவித்து, பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற இதுவே தகுந்த தருணம்.

ரசாயன உரங்களால் பாதிக்கப் பட்ட மண் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது அரசு உயிரி உரங்கள் மற்றும் இடு பொருட்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்கி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x