Published : 20 Aug 2019 09:55 AM
Last Updated : 20 Aug 2019 09:55 AM

எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி நீக்கம்?- பல இயந்திரங்களில் இந்தி மொழி சேர்ப்பு, வாடிக்கையாளர்கள் அவதி

எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மொழி நீக்கப்பட்டு, இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளதால் ஆங்கிலம் தெரியாத வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏடிஎம் இயந் திரங்களில் ஏற்கெனவே ஆங்கில மொழி மட்டுமே பயன்பாட்டு மொழியாக இருந்தது. வாடிக்கை யாளர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியாது என்ற நிலையில் பணம் எடுக்க பெரும் சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழிகளும் பயன்பாட்டு மொழியாக இந்த இயந்திரங்களில் சேர்க்கப்பட்டன. அந்தவகையில், தமிழகத்தில் அனைத்து ஏடிஎம் களிலும் தமிழ்மொழியும் பயன் பாட்டு மொழியானது. இதனால், ஆங்கிலம் தெரியாத வாடிக்கை யாளர்களும் பணம் எடுப்பது எளிதானது.

இந்நிலையில், நேற்று (ஆக. 19) பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்கள் பலவற்றில் தமிழ் மொழி நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் மட்டும் பயன்பாட்டு மொழியாக இடம்பெற்றிருந்தன.

திருச்சி, அரியலூர், நாகை மாவட்டம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சில இயந்திரங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியும் சேர்க்கப்பட்டிருந்தது. சில இயந்திரங்களில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலத்துடன் இந்தி மற்றொரு மொழியாகச் சேர்க்கப்பட்டிருந்தது. பாஸ் புத்தகம் அச்சடிக்கும் தானியங்கி இயந்திரத்தில் தமிழ் மொழிக்குப் பதிலாக இந்தி சேர்க்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, மயிலாடுதுறை யைச் சேர்ந்த ஆர்.செந்தில் முருகன், ‘இந்து தமிழ்' நாளித ழிடம் கூறியபோது, “சில ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மொழி வராததால் ஆங்கிலம் தெரியாத வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். ஆங்கிலம் தெரிந்த சிலர் வாடிக்கையாளர்களுக்கு உதவி வந்தனர். அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி, அனைத்து வரவு- செலவு விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் மத்திய அரசு வங்கியின் ஏடிஎம்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல” என்றார்.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பயன்பாட்டு மேலாளர் ஒருவர் கூறியபோது, “எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பல்வேறு நிறுவனங்களின் இயந்திரங்கள் வைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதை மாற்றிவிட்டு பொதுவான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மொழி தொடர்பான கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x